இலங்கையில் ஒத்திவைக்கப்படும் அடுத்த கிரிக்கெட் தொடர்

275

இலங்கை கிரிக்கெட் சபை (SLC), இம் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நடாத்தவிருந்த நான்கு அணிகள் பங்குபெறும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் மீண்டும் கொவிட்-19 வைரஸ் அச்சம் உருவாகியுள்ள நிலையில், சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளை கருத்திற்கொண்டே இலங்கை கிரிக்கெட் சபை இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரினை ஒத்திவைத்திருக்கின்றது.

கொவிட் அச்சத்தினால் மேஜர் எமர்ஜிங் ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

அதேநேரம், இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் கொவிட்-19 வைரஸ் அச்சம் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபையினால் இன்று (6) ஒத்திவைக்கப்பட்ட இரண்டாவது கிரிக்கெட் தொடராகவும் அமைகின்றது. முன்னர், 23 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் 2020/21 ஆம் ஆண்டின் பருவகாலத்திற்கான மேஜர் எமர்ஜிங் ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதேநேரம், தற்போது ஒத்திவைக்கப்பட்டிருக்கும் தொடரில் பங்கெடுக்கின்ற நான்கு அணிகளும் குசல் மெண்டிஸ், திமுத் கருணாரத்ன, நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க போன்ற முன்னணி வீரர்களின் தலைமையில் வழிநடாத்தப்பட இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, இந்த தொடரில் பங்கெடுக்கவிருந்த அணிகள் ஒவ்வொன்றிலும் 9 தேசிய அணி வீரர்களும், முதல்தர கழக அணிகளின் வீரர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த கிரிக்கெட் தொடர் தேசிய அணியில் காணப்படும் வீரர்களின் திறமைகளை வெளிக்காட்டும் நோக்கிலும், போட்டித்தன்மையினை அதிகரிக்கும் நோக்கிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததாக இலங்கை கிரிக்கெட் சபை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் நடைபெறவுள்ள லங்கா T10 சுப்பர் லீக்!

மறுமுனையில், இலங்கை இராணுவப்படை ஒழுங்கு செய்த T20 கிரிக்கெட் தொடரும் கொவிட்-19 வைரஸ் அச்சத்தினால் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<