கார் விபத்தில் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர்

521

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் நஜீப் டரகாய் கார் விபத்துக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், இன்றைய தினம் (6) உயிரிழந்துள்ளார் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் 29 வயதான அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான நஜீபுல்லாஹ் டரகாய், கடந்த 3ம் திகதி கார் விபத்துக்கு உள்ளாகியிருந்தார். இவர், சந்தையொன்றில் பொருட்களை கொள்வனவு செய்துகொண்டு, வீதியை கடக்கும் போது, கார் ஒன்று மோதியதில் கடுமையான காயங்களுக்கு உள்ளானார். 

சூரியவெவயில் முதலாவது விளையாட்டுப் பாடசாலை நிர்மாணம்

இதனைத் தொடர்ந்து உடனடியாக கிழக்கு நன்கஹார் பகுதியில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட இவர், சிகிச்சை வழங்கப்பட்டும், கோமா நிலையை அடைந்ததாக வைத்தியர்கள் அறிவித்தனர். அவர் கோமா நிலையிலிருந்து மீள்வது தொடர்பில் வைத்தியர்கள் எவ்விதமான நம்பிக்கையான வார்த்தைகளையும் வெளியிடவில்லை.

தொடர்ந்தும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப்பெற்றுவந்த இவர், இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தங்களுடைய உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை, “ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் கிரிக்கெட்டை விரும்பும் ஆப்கானிஸ்தான் மக்கள் அனைவருக்கும் மிக துக்கமான செய்தியாக, அதிரடி ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், சிறந்த மனிதருமான நஜீப் டரகாய், மோசமான விபத்து காரணமாக எம்மை விட்டு பிரிந்தமை அதிர்ச்சியளிக்கிறது” என பதிவிடப்பட்டிருந்தது.

நஜீப் டரகாய்  2014ம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே ஏ அணிக்கு எதிரான  தொடரில், முதற்தர போட்டிகளில் அறிமுகமாகினார்.  24 முதற்தர போட்டிகளில் 47.20 என்ற சராசரியில் 2030 ஓட்டங்களை குவித்துள்ளார். அதேநேரம், 2017ம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20I தொடரில் அறிமுகமாகிய இவர், 12 T20I போட்டிகளில் 258 ஓட்டங்களை குவித்துள்ளார்.

Video – இந்த ஆண்டு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுமா?

அதேநேரம், நஜீப் டரகாய் இறுதியாகவும் கடந்த வருடம் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், இவர் அயர்லாந்து அணிக்கு எதிராக கடந்த 2017ம் ஆண்டு ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். 

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுடன் தொடர்புடைய இரண்டாவது மரணமாக டரகாயின் மரணம் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நடுவர் பிஸிமில்லாஹ் ஜன் ஷின்வாரி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<