கோலி, ரெய்னாவின் சாதனைப்பட்டியலில் இணைந்த ரோஹித் சர்மா!

230
Rohit Sharma
Image Courtesy -IPLT20.COM

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் 5000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையினை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ரோஹித் சர்மா பெற்றுக்கொண்டுள்ளார்.

நேற்றைய தினம் (1) நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியின் போது, ரோஹித் சர்மா இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபியில் நடைபெற்றது.

>> ஒரே இரவில் IPL ஹீரோவான தினக்கூலி தொழிலாளியின் மகன்

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை மும்பை அணிக்கு வழங்கியது. இதன்படி, களமிறங்கிய மும்பை அணியின் தலைவர் ரோஹித் சர்மா, தன்னுடைய முதலாவது நான்கு ஓட்டத்துடன் ஐ.பி.எல். தொடரில் 5000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுக்கொண்டார்.

ரோஹித் சர்மா தன்னுடைய 192வது ஐ.பி.எல். போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளதுடன், இவரது ஓட்ட சராசரி 31.87 ஆக உள்ளது. அதேநேரம், ரோஹித் சர்மா ஐ.பி.எல். தொடரில் இதுவரை ஒரு சதத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன், 204 சிக்ஸர்களை விளாசியுள்ளார்.

அதேநேரம், ஐ.பி.எல். தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்டவர்கள் பட்டியலின் முதல் இடத்தை, றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோலி பெற்றுக்கொண்டுள்ளார்.

விராட் கோஹ்லி 193 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 5 சதங்கள் உள்ளடங்களாக 5430 ஓட்டங்களை குவித்துள்ளார். இவரையடுத்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுரேஸ் ரெய்னா 192 போட்டிகளில் ஒரு சதம் அடங்கலாக 5368 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஐ.பி.எல். தொடரை பொருத்தவரை விராட் கோலி, சுரேஸ் ரெய்னா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மாத்திரமே 5000 ஓட்டங்களை கடந்துள்ளனர். இந்த பட்டியலில் அடுத்து இணைவதற்கான வாய்ப்பினை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வோர்னர் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

>> Video – இந்த ஆண்டு இலங்கையில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுமா?

டேவிட் வோர்னர் இதுவரை 129 ஐ.பி.எல். போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ள நிலையில், 4 சதங்கள் அடங்கலாக 4793 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இவர், 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவதற்கு இன்னும் 203 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்படுகின்றது.

இதேவேளை, ரோஹித் சர்மா 5000 ஓட்டங்களை கடந்ததுடன், மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த பருவகாலத்தின் தங்களுடைய 2வது வெற்றியை நேற்றைய தினம் பஞ்சாப் அணிக்கு எதிராக பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<