தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்த தீர்மானம்

191
National Youth Sports Festival

இவ்வருடம் நடைபெறவுள்ள 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், கடந்த காலங்களை விட இம்முறை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.  

>> தெற்காசியாவின் அதிவேக வீரர் யுபுனுக்கு மற்றொரு சர்வதேசப் பதக்கம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெஷார ஜயசிங்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

இதன்படி, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வீரர்களின் பங்குபற்றுதலை அதிகரித்து, அதில் வெற்றி பெறுகின்ற வீரர்களுக்கு வழங்குகின்ற பணப்பரிசிலை அதிகரிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.  

இந்த நிலையில், குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் தெஷா ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில்,

”இந்த விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்காக பாடசாலைகளுக்குச் செல்கின்ற மாணவர்களை சேர்த்துக் கொள்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதேபோல, 3 நாட்கள் ஒரே இடத்தில் வீரர்களை தங்கவைத்து வீட்டுக்கு அனுப்பவதையும் நான் விரும்பவில்லை

எனவே, அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்களாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் கடைசி இரண்டு நாட்களையும் வீரர்களின் மேலதிக திறமைகள் உள்ளிட்ட விடயங்களை மேம்படுத்துவதற்கும், அதுதொடர்பிலான நிகழ்ச்சிகளை அவர்களுக்கு கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

>> தேசிய விளையாட்டு விழாவில் வெற்றி பெறும் 10 பேருக்கு புலமைப்பரிசில்

இதனிடையே, இவ்வருடம் நடைபெறவிருந்த 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெறுகின்ற பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கிடையிலான போட்டிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

எனவே, 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி அம்சமான மெய்வல்லுனர் உள்ளிட்ட போட்டி நிகழ்ச்சிகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தீர்மானித்துள்ளது

அதன்படி, கொழும்பு சுகததாச அல்லது தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த தெஷா ஜயசிங்க, தேசிய இளைஞர் விளையாட்டு விழாவானது இலங்கையில் நடைபெறுகின்ற இரண்டாவது மிகப் பெரிய விளையாட்டு விழாவாகும்

எனவே, பின்தங்கிய கிராமங்களில் இருந்து வருகின்ற வீரர்களை புற்தரையில் ஓட வைப்பதை நான் விரும்பவில்லை. அவர்களுடைய திறமைகளை வெளி உலகிற்கு கொண்டு வரவேண்டுமானால் சுவட்டு மைதானங்களில் ஓடுவதற்கான வசதிகளை நாங்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்

>> தேசிய விளையாட்டு விழா வேகநடை, சைக்கிளோட்டம், மரதன் போட்டிகள் ஒக்டோபரில்

இதுஇவ்வாறிருக்க, கொவிட் – 19 வைரஸ் காரணமாக இவ்வருடம் தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை நடத்த முடியாமல் போனால் அடுத்த வருடம் அதை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை புதிய பரிணாமத்தில், பல புதிய விளையாட்டு நிகழ்ச்சிகளை உள்ளடக்கியவாறு நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்

இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் சேர்ந்த 12,000 இளையோர் கழகங்களைச் சேர்ந்த வீர வீராங்களை தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

இதில், கரப்பந்தாட்டம், கபடி, வலைப்பந்தாட்டம், கால்பந்து மற்றும் ரக்பி உள்ளிட்ட வினையாட்டுக்களின் பயிற்சி முகாம்களை தற்போது முதல் ஆரம்பிப்பதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<