“ஆட்டநாயகன் விருது நடுவருக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்“ – செவாக்

350

ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பித்துள்ள இந்தியன் ப்ரீமீயர் லீக் (IPL) தொடரின் இரண்டாவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் ஆகிய அணிகள் நேற்று (20) பலப்பரீட்சை நடத்தியிருந்தன.

மிகவும் விறுவிறுப்பான இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி, 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியும் அதே ஓட்ட எண்ணிக்கையை பெற போட்டியில் சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.  

“மாலிங்கவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது“ – ரோஹித் சர்மா

வழங்கப்பட்ட சுப்பர் ஓவரில் காகிஸோ ரபாடாவின், அபார பந்துவீச்சால் டெல்லி அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. எனினும், இந்தப் போட்டியை பொருத்தவரை அனைவரையும் ஈர்க்கும் வகையிலான துடுப்பாட்டத்தை பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் வெளிப்படுத்தியிருந்தார். 

பஞ்சாப் அணி 55 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த போதும், தனியாளாக 89 ஓட்டங்களை குவித்து, இறுதி ஓவரில் தன்னுடைய விக்கெட்டினை பறிகொடுத்திருந்தார் மயங்க் அகர்வால். இதன்போது, 18வது ஓவரின் மூன்றாவது பந்தில், மயங்க் அகர்வால் துடுப்பெடுத்தாடி 2 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இந்தநிலையில், மறுமுனையில் துடுப்பெடுத்தாடிய க்ரிஸ் ஜோர்டன் துடுப்பாட்ட முனையில் மட்டடையை எல்லைக்கோட்டை தாண்டி வைக்கவில்லை என குற்றம் சுமத்தி ஒரு ஓட்டத்தினை மாத்திரமே நடுவர் வழங்கினார்.

எவ்வாறாயினும், பின்னர் குறித்த ஓட்டத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது, குறித்த ஓட்டமானது முறையான ஓட்டம் என உறுதிசெய்யப்பட்ட போதும், அந்த ஓட்டத்தினை பஞ்சாப் அணிக்கு நடுவர்கள் வழங்கவில்லை. எனவே, இறுதியில் பஞ்சாப் அணி ஒரு ஓட்டத்தால் வெற்றியை தவறவிடும் நிலை ஏற்பட்டது. எனவே, நடுவர்களின் இந்த தீர்ப்பு சமுகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

Video – பங்களாதேஷ் – இலங்கை மற்றும் LPL தொடர்கள் நடைபெறுவதில் சந்தேகம்? | Cricket Kalam 46

இந்தநிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மாத்திரமின்றி, பஞ்சாப் அணியின் முன்னாள் வீரரும், பயிற்றுவிப்பாளருமான வீரேந்திர செவாக் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் நடுவரின் இந்த தீர்ப்புக்கு விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செவாக் குறிப்பிடுகையில், “நான் போட்டிக்கான ஆட்டநாயகன் தெரிவை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சரியாக ஓட்டத்தை வழங்காத நடுவருக்குதான் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும். நடுவரால் ஷோர்ட் ரன் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றால், போட்டியில் முடிவு மாறியிருக்கும்” என பதிவிட்டுள்ளார். 

இதேவேளை, நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்கொட் ஸ்டைரிஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் ஆகியோரும் நடுவரின் முடிவுக்கு தங்களுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளனர்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<