மற்றொரு இக்கட்டான சூழ்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ்

416

இந்த ஆண்டுக்கான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஒருவாரகாலம் எஞ்சியுள்ள நிலையில் எம்.எஸ். டோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றொரு இக்கட்டான நிலைமையை சந்திக்கவுள்ளது. 

ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி – நடப்பு சம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், அந்த அணி டுபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு ஆறுதல் வெற்றி

கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்ட அவ்வணியின் வேகப் பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னரே அணியோடு இணைந்து கொள்ள முடியும். இந்நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களில் அவுஸ்திரேலியாவின் ஷேன் வொட்சன், தென்னாபிரிக்க வீரர்களான பெப் டு ப்ளெஸ்சிஸ், லுங்கி ங்கிடி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் தற்போது அணியில் இணைந்துள்ளனர்.  

இருந்தாலும் மேற்கிந்திய தீவுகளில் தற்சமயம் நடைபெற்றுவரும் கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவதால் மேற்கிந்திய தீவுகளின் டுவைன் பிராவோ, நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னெர், தென்னாபிரிக்காவின் இம்ரான் தாஹிர் ஆகியோர் குறித்த தொடர் நிறைவடைந்த பின்னரே ஐக்கிய அரபு இராச்சியம் சென்று சென்னை அணியில் இணையவுள்ளனர்.

இந்நிலையில் சென்னை அணியில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜொஸ் ஹெஸில்வுட், இங்கிலாந்து சகலதுறை வீரர் சாம் கர்ரன் ஆகியோர் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னரே ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கவுள்ளனர். குறித்த ஒருநாள் தொடர் எதிர்வரும் புதன்கிழமை (16) நிறைவடைகிறது. 

இலங்கை டெஸ்ட்டுக்காக ஐ.பி.எல். தொடரை நிராகரித்தார் தர்மசேன

இதனால் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணியின் முதல் இரண்டு போட்டிகளில் இருவரும் விளையாட மாட்டார்கள். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் நடைபெறவுள்ள ஆரம்ப போட்டி மற்றும் 21ஆம் திகதி நடைபெறுகின்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான போட்டி ஆகிய இரு போட்டிகளிலும் இவர்கள் இவ்வாறு பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

எதிர்வரும் 17ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் பயணிக்கும் இவ்விருவரும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். அதன் பின்னர் கொரோனா பரிசோதனை நடாத்தப்பட்டு அணியில் இணைக்கப்படவுள்ளதாக சென்னை அணி தெரிவித்துள்ளது. 

ஆரம்பத்தில் சென்னை அணியில் இரு வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டமை, அனுபவ துடுப்பாட்ட வீரரும், அணியின் உபதலைவருமான சுரேஷ் ரெய்னாவின் விலகல், அதனை தொடர்ந்து முக்கிய சுழற் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங்கின் விலகல், தற்போது அனுபவ வெளிநாட்டு வீரர்களான ஜொஸ் ஹெஸில்வூட் மற்றும் சாம் கர்ரன் ஆகியோரின் பிந்திய வருகை காரணமாக சென்னை அணி பாரிய இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<