வேகப் பந்துவீச்சாளர்களை நம்பியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

1215

முன்னதாக இலங்கை அணி தமது தாயகத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் சுழல் பந்துவீச்சினையே நம்பி இருந்தது. ஆனால், தற்போது காலங்கள் மாறிவிட்ட நிலையில் இலங்கை அணி, வேகப் பந்துவீச்சினை நம்பும் ஒரு காலம் வந்துவிட்டதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட தேர்வாளரும், தேசிய கிரிக்கெட் அணியின் முகாமையாளருமான அசந்த டி மெல் தெரிவித்திருக்கின்றார்.

மழையினால் தடைப்பட்ட யாழ்ப்பாண – தோமியன் மாஸ்டர்ஸ் அணிகளின் மோதல்

மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒன்றில் இலங்கையுடன் விளையாடுவதற்காக பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கை வரவுள்ளது. இந்த நிலையில், குறித்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தனது பலமாக வேகப் பந்துவீச்சினை உபயோகிக்க காத்திருப்பதாகவும் டி மெல் குறிப்பிட்டிருக்கின்றார்.

பொதுவாக, கடந்த காலங்களில் இலங்கை – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளினை நோக்கும் போது இலங்கை அணியின் ஆதிக்கமே அதிகமாக காணப்பட்டிருந்தது. ஆனால், 2017ஆம் ஆண்டில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்கள் இலங்கை வீரர்களுக்கு எதிராக தமது கன்னி டெஸ்ட் வெற்றியினை பதிவு செய்திருந்தனர்.

எனவே, பங்களாதேஷ் அணி தொடர்பாக அவதானமாக இருக்கும் நோக்கிலேயே அசந்த டி மெல், வேகப் பந்துவீச்சினை நம்புவதாக குறிப்பிட்டிருக்கின்றார். இன்னும், இலங்கை டெஸ்ட் அணியின் சிரேஷ்ட சுழல் பந்துவீச்சாளராக இருக்கும் டில்ருவான் பெரேரா போன்றோர் அவர்களது வயதின் காரணமாக நீண்ட காலம் இலங்கை அணிக்கு விளையாடமாட்டார்கள் என்பதால் வேகப் பந்துவீச்சாளர்களை நம்ப வேண்டிய தேவை இருப்பதாகவும் டி மெல் கருதுகின்றார்.

”எங்களது எண்ணம் அவர்களை (பங்களாதேஷினை) வேகத்தினை வைத்து வீழ்த்துவதாக இருக்கின்றது. (ஆனால்) அது நிச்சயமாக சுழல் பந்துவீச்சாக இருக்கப் போவதில்லை. பங்களாதேஷ் அணியிடம் சிறந்த சுழல் பந்துவீச்சுத்துறை ஒன்று இருக்கின்றது. அதேநேரம் எங்களிடம் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்கள் தொகுதி ஒன்று இருக்கின்றது. எனவே, எங்களது பலத்தினை நாங்கள் நம்புவது அறிவுபூர்வமானது. நாங்கள் குறைந்தது ஐந்து வேகப் பந்துவீச்சாளர்களையாவது அணியில் வைத்திருக்க எண்ணியுள்ளோம். பயிற்சியாளர்களும் அதனையே தான் எண்ணுகின்றார்கள்.” என டி மெல் சன்டே ஐலன்ட் செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.

மொத்தமாக 23 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் குழாம் அடுத்த வாரம் முதல் பங்களாதேஷிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான பயிற்சிகளை ஆரம்பம் செய்யவிருக்கின்றது. அசந்த டி மெல், இந்த வீரர் குழாத்தில் சிறப்பாக செயற்பட எதிர்பார்க்கும் வீரர்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

விறுவிறுப்பான போட்டியில் இங்கிலாந்து வெற்றி

”மினோத் பானுக்க பார்க்கும் போது மிகவும் கவரக்கூடியவராக இருக்கின்றார். அவர் வேகமாக ஓட்டங்கள் குவிக்கும் ஒரு வீரர். இப்படியான ஆற்றல்களுடன் ஒரு வீரரினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கின்றது. வேகப் பந்துவீச்சாளரான சந்துஷ் குணத்திலக்கவின் பந்துவீச்சு முறையும் சிறப்பாக இருக்கின்றது. மேலதிகமாக குணத்திலக்கவினால் சிறந்த முறையில் துடுப்பாடவும் முடியும். நாங்கள் குழாத்தில் இளம் வீரர்களை வைத்திருக்க விரும்புகின்றோம். எனவே, அவர்கள் அணியில் இருப்பதன் மூலம் தேவையான அனுபவத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். பயிற்சியாளர்களுடன் இணைந்து நிறைய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை பார்த்துள்ளோம். நாங்கள் அவர்கள் செய்த விடயங்களை பாராட்ட வேண்டியிருப்பதோடு, அவர்களில் எவர் விரைவுப் பாதைக்கு பொருத்தமானவர் என்பதனையும் பார்க்க வேண்டும்.”

இலங்கை கிரிக்கெட் சபையானது, நடைபெறவுள்ள பங்களாதேஷ் – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணையினை இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. அதேநேரம், நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரே கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர், அதாவது கடந்த பெப்ரவரிக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள முதல் சர்வதேச தொடராகவும் அமையவிருக்கின்றது.

மறுமுனையில் இலங்கை கிரிக்கெட் அணி, இந்த டெஸ்ட் தொடரில் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களைப் பயன்படுத்தும் என்பதால் இந்த தொடரின் டெஸ்ட் போட்டிகள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான காலியில் நடைபெறுவது சந்தேகம் என கருதப்படுகின்றது. ஆனால், இந்த விடயம் தொடர்பிலான இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், சுமார் 30 வீரர்கள் கொண்ட குழுவுடன் இம்மாத இறுதியில்  இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணி சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய தங்களை தனிமைப்படுத்திய பின்னர் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான தங்களது பயிற்சிகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தி மூலம் – The Island பத்திரிகை

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<