லசித் மாலிங்கவை வெளியேற்றிய மும்பை இந்தியன்ஸ்

3161

இந்தப் பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்கவுக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பெட்டின்ஸன் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் சற்று முன்னர் (02) அறிவித்துள்ளது. 

13ஆவது பருவகாலத்திற்கான ஐ.பி.எல். தொடரானது எதிர்வரும் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தின் மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்குபெறும் அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு இராச்சியம் சென்று, அதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி தவிர்ந்த ஏனைய அணிகள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் லசித் மாலிங்க

இதில் இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தனவின் பயிற்றுவிப்பின் கீழ் வழிநடாத்தப்படும் நடப்பு சம்பியனான ரோஹிட் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியில், இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மாலிங்க முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிவரும் மாலிங்க இந்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார். மாலிங்கவினுடைய தந்தை சுகவீனமடைந்து காணப்படுகின்ற நிலையில், அவர் தன் தந்தைக்கு அருகில் இருக்க வேண்டியதன் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

குறித்த தகவலை இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரரை அறிவித்துள்ளது. அந்தவகையில், 30 வயதுடைய அவுஸ்திரேலிய அணியின் வலதுகை வேகப்பந்துவீச்சாளரான ஜேம்ஸ் பெட்டின்ஸன், மாற்று வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸ் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இதுவரையில் இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் அறிமுகம் பெறாத ஜேம்ஸ் பெட்டின்ஸன் அவுஸ்திரேலிய அணிக்காக நான்கு T20 சர்வதேச போட்டிகளிலும், கழகரீதியில் 39 T20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இறுதியாக பெட்டின்ஸன் 2012ஆம் ஆண்டு T20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்தாலும், இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற பிக்பேஸ் T20 லீக் தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் பிரகாசித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றியதற்கு லசித் மாலிங்க முக்கிய வீரராக திகழ்ந்தார். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது ஒரு அனுபவ வேகப்பந்துவீச்சாளரை இழந்திருப்பது அணிக்கு பாரிய இழப்பாகவே காணப்படுகிறது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<