சென்னை சுப்பர் கிங்ஸ் இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

316
Gettyimages

இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடரில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு இராச்சியம் சென்ற சென்னை அணி வீரர்கள் 2 பேர் உட்பட அவ்வணியின் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிருந்த நிலையில் தற்போது ஏனைய வீரர்களுக்கு நடாத்தப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் உலகில் பெருமளவான இரசிகர்களை கொண்ட லீக் தொடரான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் 13ஆவது பருவகாலத்திற்கான தொடர் கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 10ஆம் திகதி வரை ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், அபுதாபி மற்றும் சார்ஜா ஆகிய மூன்று மைதானங்களில் நடைபெறவுள்ளன.

ரிச்சட்சனுக்கு பதிலாக RCB அணியில் அடம் ஸம்பா

குறித்த தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தை சென்றடைந்து குறிப்பிட்ட அணிகள் தனிமைப்படுத்தலையும் நிறைவு செய்து பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் சென்னை அணி மாத்திரம் இதுவரையில் பயிற்சிகளில் களமிறங்கவில்லை. 

காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் ஆகிய வீரர்கள் உட்பட அவ்வணியின் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டதன் காரணமாக, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினரின் தனிமைப்படுத்தல் காலம் மேலும் நீடிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே சென்னை அணியினர் வலைப்பயிற்சிகளில் களமிறங்கவில்லை. 

மேலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ வீரரான சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட சில காரணங்களினால் திடீரென 2020 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி நாடு திரும்பிய நிலையில், கொரோனா தொற்று காரணமாக இவ்வருட ஐ.பி.எல் தொடர் நடைபெறுமா.? இல்லையா.? என்ற கேள்வி பரவலாக எழுந்தது. இந்நிலையில் நேற்று (01) சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்ற செய்தி வெளியாகியுள்ளது. 

>> தரங்க பரணவிதான ஏன் திடீர் ஓய்வை அறிவித்தார்?

மேலும், முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த 13 பேருக்கும் மீண்டும் நாளை (03) கொரோனா பரிசோதனை நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 4ஆம் திகதி முதல் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ளனர். ஆனால் தீபக் சஹார் மற்றும் ருதுராஜ் ஆகிய வீரர்கள் 12ஆம் திகதிக்கு பின்னரே பயிற்சியில் இணைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க அணியை சேர்ந்த வீரர்களான பாப் டு ப்ளெஸில் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி ங்கிடி ஆகிய வீரர்கள் நேற்று (01) டுபாய் சென்றடைந்தனர். தற்போது 6 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ள இவர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனையின் பின்னர் எதிர்வரும் 8ஆம் திகதி பயிற்சிகளில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இதேவேளை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணி வீரர்கள் குழுவாக ஐக்கிய அரபு இராச்சியம் பயணித்த வேளையில் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அதில் பயணிக்கவில்லை. பின்னதாவே பயணிக்கவிருந்த நிலையில், ஹர்பஜன் சிங் தற்போது பயணத்தை மேலும் சில நாட்கள் பிற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக ஹர்பஜன் சிங் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பாரா.? இல்லையா.? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<