ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரில் பேயர்ன் முனிச் அணியிடம் 8-2 என்ற கோல் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த பார்சிலோனா அணியின் பயிற்சியாளர் குயிக் செட்டியன் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1989 தொடக்கம் 1995 வரை ஸ்பெயினின் பலம் மிக்க பார்சிலோனா அணியில் ஆடிய நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரொனால்ட் கோமன் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பார்சிலோனா வீரருக்கு கொரோனா தொற்று
61 வயதான முன்னாள் ரியல் பெட்டிஸ் பயிற்சியாளர் செட்டியன் கடந்த ஜனவரி மாதமே பார்சிலோனா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். அவர் 25 போட்டிகளில் அந்த அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.
அவரது பயிற்சியின் கீழ் பார்சிலோனா அணி 16 வெற்றிகள், நான்கு சமநிலைகள் மற்றும் ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது.
இம்முறை லா லிகா பருவத்தில் பார்சிலோனா இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, சம்பியனான ரியல் மெட்ரிட்டை விடவும் அந்த அணி ஐந்து புள்ளிகளால் பின்தங்கியது. கோபா டெல் ரே காலிறுதியிலும் அட்லடிகோ பில்போவிடம் பார்சிலோனா தோல்வியை சந்தித்தது.
எதிர்வரும் நாட்களில் புதிய பயிற்சியாளர் ஒருவர் அறிவிக்கப்படுவார் என்று அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
Video – அதிரடி மாற்றங்களுக்கு காத்திருக்கும் BARCELONA !| FOOTBALL ULLAGAM
கடந்த வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் ஜெர்மனி சம்பியன் அணியான பேயர்ன் முனிச்சிடம் பார்சிலோனா பெரும் தோல்வியை சந்தித்தது. பார்சிலோனா கடந்த ஐந்து ஆண்டுகளில் சம்பியன்ஸ் லீக் காலிறுதியில் தோற்று வெளியேறுவது நான்காவது முறையாக இருந்தது.
எர்னஸ்டோ வல்வெர்டேவுக்கு பதில் பார்சிலோனா பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்த செட்டியன், பேயார்னுடனான தோல்விக்குப் பின்னர், “எம்மை மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. எதிர்காலத்திற்கு தேவையான முடிவை எடுக்க வேண்டி உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை (17) அவர் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின் பார்சிலோனா வெளியிட்ட அறிவிப்பில், “முதல் நிலை அணியின் பரந்த அளவிலான மறுசீரமைப்பு ஒன்றில் எடுக்கப்பட்ட முதல் முடிவு இதுவாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது வெற்றியை சுவைத்த புளூ ஈகல்ஸ் மற்றும் கொழும்பு அணிகள்
பார்சிலோனா கழகத்தின் தலைவர் பதவிக்காக அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைத்த திட்டமிடப்பட்ட வாக்கெடுப்பு மார்ச் 15 ஆம் திகதி நடத்தப்படும் என்றும் அந்தக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
கழகம் மாற்றங்களை செய்ய விரும்பினால் தாம் முதலில் வெளியேற விரும்புவதாக அந்த அணியின் பின்கள வீரர் கெரார்ட் பிகு குறிப்பிட்டார்.
அண்மைய மாதங்களில் பார்சிலோனா அணியில் நீடிக்கும் குழப்ப சூழல் 33 வயதுடைய லியோனல் மெஸ்ஸியின் எதிர்காலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று பரவலாக பேசப்படுகிறது. புதிய கழகம் ஒன்று பற்றிய எண்ணம் அவரின் மனதில் தோன்றி இருப்பதாக எஸ்போர்டே இன்டரேடிவோ ஊடக நிறுவனம் கடந்த ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்தது.
எனினும் பார்சிலோனா நிர்வாகக் குழுக் கூட்டம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றபோது, மெஸ்ஸி வெளியேற விரும்புவது பற்றி எதுவும் கேட்பதில்லை என்று வலியுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<