இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான சேட்டன் சோஹ்ன் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக தனது 73 ஆவது வயதில் இன்று (16) காலமானர்.
கடந்த ஜூலை மாதம் கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக குருக்ராம் நகர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சோஹான் தொடர்ந்து சிகிச்சைகள் பெற்று வந்தார். ஆனால், சோஹான் பெற்ற சிகிச்சைகள் அவரின் உடல்நிலையில் மாற்றங்கள் எதனையும் கொண்டுவரவில்லை. தொடர்ந்து, சோஹானுடைய கிட்னிகள் இரண்டினதும் தொழிற்பாடு தடைப்பட அவரின் உயிர் உலகைவிட்டுப் பிரிந்தது.
>>சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டோனி<<
இந்திய கிரிக்கெட் அணிக்காக 1969 ஆம் ஆண்டு அறிமுகமாகிய சோஹான் 12 வருடங்கள் வரை தனது தாயக அணியினை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவம் செய்து 40 டெஸ்ட் போட்டிகளிலும் 7 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், சோஹான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சுனில் கவாஸ்கர் உடன் இணைந்து 1979 ஆம் ஆண்டு லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பகிர்ந்திருந்த 213 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டம் இன்று வரை மிகவும் பிரபல்யமான இணைப்பாட்டங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
இதேவேளை உள்ளூர் கிரிக்கெட்டினை நோக்கும் போது ரஞ்சிக் கிண்ணத் தொடரில் டெல்லி மற்றும் மஹராஸ்ட்ரா ஆகிய அணிகளை பிரதிநிதித்துவம் செய்திருக்கும் சேட்டன் சோஹான் முதல்தரக் கிரிக்கெட் போட்டிகளில் 40.22 என்ற துடுப்பாட்ட சராசரியோடு மொத்தமாக 11,173 ஓட்டங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்றதன் பின்னர் இந்திய கிரிக்கெட் அணியின் முகாமையாளராக சில காலம் செயற்பட்டிருக்கும் சேட்டன் சோஹான் கிரிக்கெட் விளையாட்டின் நிர்வாகத்துறையிலும் தனது சேவையை பதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
>>டோனியை பின்பற்றி ஓய்வை அறிவித்தார் சுரேஸ் ரெய்னா<<
கிரிக்கெட் விளையாட்டு தவிர அரசியலிலும் ஆர்வம் காட்டிய சேட்டன் சோஹான் இந்தியாவின் இரண்டாம் நிலை பாராளுமன்ற தேர்தலாக கருதப்படும் லோக் சபா தேர்தலில் இரண்டு தடவைகள் வெற்றி பெற்றிருப்பதோடு, உத்தரபிரதேச அரசாங்கத்தின் மந்திரிசபையிலும் உறுப்பினராக அங்கத்துவம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<