மீண்டும் பிற்போடப்பட்டது லங்கன் ப்ரீமியர் லீக்

1293
LPL
Image courtesy - Espncricinfo

இலங்கையில் இம்மாதம் 28ம் திகதி முதல் ஆகஸ்ட் 20ம் திகதிவரை நடைபெறவிருந்த லங்கன் ப்ரீமியர் லீக் தொடர் (LPL) எதிர்வரும் நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை இம்மாதம் 28ம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்த போதும், சுகாதார அமைச்சு இலங்கை கிரிக்கெட் சபையின் கோரிக்கையை நிராகரித்துள்ளதால், தொடர் பிற்போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

>> லன்கன் ப்ரீமியர் லீக் திகதி அறிவிப்பு

குறிப்பாக வெளிநாட்டு வீரர்களை இலங்கைக்கு அழைத்துவருவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விடயங்கள் என்பவற்றின் காரணமாக தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கன் ப்ரீமியர் லீக் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, 

“சுகாதார அதிகாரிகளுடன் நாம் கலந்துரையாடியதன் அடிப்படையில், வெளிநாட்டில் இருந்து உட்பிரவேசிப்பவர்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், தொடரை இம்மாத இறுதியில் நடத்த முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிற்போடப்பட்டுள்ள லங்கன் ப்ரீமியர் லீக் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக்கினை தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் மாத மத்தியப்பகுதியில் தொடங்கி டிசம்பர் வரை நடைபெறும் எனவும் சம்மி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை 5 அணிகள் மோதும் லங்கன் ப்ரீமியர் லீக் தொடரை முதன்முறையாக ஏற்பாடு செய்திருந்ததுடன், தொடரினை 5 வருடங்களுக்கு நடத்துவதற்கான உரிமத்தினை இனவேசன் ப்ரொடக்ஸன் குழுமத்துக்கு, 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்கியிருந்தது.

>> Video – இனியாவது தொடர்ந்து நடக்குமா LPL?? | Cricket Galatta Epi 31

குறித்த இந்த தொடரை இலங்கை கிரிக்கெட் சபை உறுதிசெய்திருந்த போதிலும், கொவிட்-19 வைரஸ் காரணமாக தொடர் நடைபெறும் சாத்தியம் குறைவாக காணப்பட்டது. இந்தநிலையில் தற்போது, வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய லங்கன் ப்ரீமியர் லீக் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<