நியூசிலாந்து கிரிக்கெட் சபை, இந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் தங்களுடைய இந்த பருவகாலத்திற்கான சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் அணிகளை தங்களுடைய நாட்டுக்கு அழைத்து, இந்த பருவகாலாத்துக்கான 37 நாட்களில் போட்டிகளை நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பாரா ஜேம்ஸ் எண்டர்சன்?
கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு பின்னர், நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பிப்பதற்கான முழு நம்பிக்கையையும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை கொண்டுள்ளது. அத்துடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை போன்று, அதியுயர் உயிரியல் பாதுகாப்பு முறையுடன் போட்டிகளை நடத்த முடியும் என டேவிட் வைட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“நாம் போட்டிகளை நடத்துவதற்கான அதிசிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். நான் தொலைபேசி மூலமாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையிடம் கலந்துரையாடினேன். அவர்கள், இங்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, அவுஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைகளும் சாதகமான முடிவுகளை தந்துள்ளன. எனவே, 37 நாட்கள் சர்வதேச கிரிக்கெட் நடைபெறும்” என டேவிட் வைட் குறிப்பிட்டார்.
அத்துடன், போட்டிகளை நடத்துவதற்காக அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் டேவிட் வைட் குறிப்பிட்டார். “நாம் வீரர்களை தனிமைப்படுத்துவது தொடர்பில் அரசாங்க முகவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். வீரர்களை ஒன்று அல்லது இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அரசாங்க முகவர்கள் எமக்கு ஆதரவை வழங்கும் வகையில் கலந்துரையாடினர்” என வைட் மேலும் சுட்டிக்காட்டினார்.
நியூசிலாந்து கிரிக்கெட் சபையின் இந்த பருவகாலத்துக்கான போட்டி அட்டவணையின் படி, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் டெஸ்ட் மற்றும் T20I போட்டிகள் என்பன அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தன. பங்களாதேஷ் அணியுடன் ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவுஸ்திரேலிய அணி குறுகிய தொடர் ஒன்றுக்காக நியூசிலாந்து வருகைத்தரவிருந்தது.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பாரா ஜேம்ஸ் எண்டர்சன்?
எனினும், தற்போதைய நிலையில், இந்த தொடர்களின் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிருக்கான உலகக் கிண்ணத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், நியூசிலாந்து அணிக்கு மேலும் போட்டிகளை நடத்துவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், நியூசிலாந்து கிரிக்கெட்டை பொருத்தவரை, மகளிர் அணி முதலில் சர்வதேச போட்டிகளில் விளையாடவுள்ளது.
“எதிர்வரும் செப்டம்பர் மாதம் நியூசிலாந்து மகளிர் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு சென்று 5 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டிகள் கொண்ட தொடர்களில் அணி விளையாடும்” என டேவிட் வைட் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க