பட்லர் – வோக்ஸ் இணைப்பாட்டத்தோடு பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து

304
(Photo by Gareth Copley/Getty Images for ECB)

சுற்றுலா பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்று முடிந்திருக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அதனை தவிர்த்து 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும் விளையாடவுள்ளது. 

இலங்கை மகளிர் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக லங்கா டி சில்வா

அதன்படி இந்த சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக இரண்டு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடர் நடைபெறுகின்ற நிலையில், தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த புதன்கிழமை (05) மன்செஸ்டர் நகரில் ஆரம்பமானது. 

இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவர் அஸார் அலி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை தமது அணிக்காகப் பெற்றுக்கொண்டார். 

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 109.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 326 ஓட்டங்களைக் குவித்தது.

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பாக, டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த துடுப்பாட்ட இன்னிங்ஸை வெளிப்படுத்திய ஷான் மசூத், தன்னுடைய 4ஆவது டெஸ்ட் சதத்தோடு 18 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 156 ஓட்டங்களைப் பெற்றார். ஷான் மசூத் பெற்ற இந்த 156 ஓட்டங்கள் அவருக்கு அவரின் கடைசி மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் கிடைத்த மூன்றாவது சதமாகவும் மாறியது. அதேநேரம் பாபர் அசாம் 69 ஓட்டங்களையும், சதாப் கான் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர், ஸ்டுவார்ட் புரோட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார். 

பின்னர், தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை தொடங்கிய இங்கிலாந்து அணியினர் 219 ஓட்டங்களை பெற்றனர். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தில் ஒல்லி போப் 62 ஓட்டங்களை பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிய, ஜோஸ் பட்லர் 38 ஓட்டங்களுடன் இங்கிலாந்துக்கு பெறுமதி சேர்த்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பாக யாசிர் ஷாஹ் தனது சுழல் மூலம் 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹமட் அப்பாஸ் மற்றும் சதாப் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டினர். 

தொடர்ந்து இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸினை அடுத்து 107 ஓட்டங்கள் முன்னிலையோடு பதிலுக்கு இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி இம்முறை 169 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் யாசிர் ஷாஹ் 33 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பில் கூடுதல் ஓட்டம் எடுத்த வீரராக மாற, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஸ்டுவார்ட் புரோட் 3 விக்கெட்டுக்களையும் கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர். 

அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில்

பாகிஸ்தான் அணியின் மோசமான இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை அடுத்து போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை (11) இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 277 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த வெற்றி இலக்கினை அடைய போட்டியின் நான்காம் நாளில் தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாட தொடங்கிய இங்கிலாந்து அணி, யாசிர் ஷாஹ்வின் அபார பந்துவீச்சு காரணமாக ஒரு கட்டத்தில் 117 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

எனினும், ஆறாம் விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் போராட்ட இணைப்பாட்டம் ஒன்றை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி போட்டியின் வெற்றி இலக்கினை 82.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களுடன் அடைந்தது. 

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்த கிறிஸ் வோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆறாம் விக்கெட்டுக்காக 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்ததோடு, அரைச்சதங்களையும் பூர்த்தி செய்தனர்.

இதில் போட்டியின் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கிறிஸ் வோக்ஸ் 10 பெளண்டரிகள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றார். அதேநேரம், ஜோஸ் பட்லர் 7 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 75 ஓட்டங்களைப் எடுத்தார்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் யாசிர் ஷாஹ் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து போராடிய போதும் அவரின் பந்துவீச்சு வீணானது. 

முகநூலில் அதிகம் பார்வையிடப்பட்ட ஐ.சி.சி. இன் வீடியோக்கள்

இப்போட்டியில் பெற்றுக்கொண்ட வெற்றியின் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக 40 புள்ளிகளைப் பெற்றுக்கொள்கின்றது. 

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணி சார்பில் துடுப்பாட்டம், பந்துவீச்சு என சகலதுறைகளிலும் அசத்திய கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.

அடுத்ததாக இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (13) சௌத்தம்ப்படன் நகரில் ஆரம்பமாகவுள்ளது.  

போட்டியின் சுருக்கம்

பாகிஸ்தான் (முதல் இன்னிங்ஸ்) – 326 (109.3) – ஷான் மசூத் 156, பாபர் அசாம் 69, சதாப் கான் 45, ஸ்டுவார்ட் புரோட் 54/3, ஜொப்ரா ஆர்ச்சர் 59/3, கிறிஸ் வோக்ஸ் 43/2

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) – 219 (70.3) – ஒல்லி போப் 62, ஜோஸ் பட்லர் 38, யாசிர் ஷாஹ் 66/4, சதாப் கான் 13/2, மொஹமட் அப்பாஸ் 33/2

பாகிஸ்தான் (இரண்டாம் இன்னிங்ஸ்) – 169 (46.4) – யாசிர் ஷாஹ் 33, ஸ்டுவார்ட் புரோட் 37/3, கிறிஸ் வோக்ஸ் 11/2, பென் ஸ்டோக்ஸ் 11/2

இங்கிலாந்து (இரண்டாம் இன்னிங்ஸ்) – 277/7 (82.1) – கிறிஸ் வோக்ஸ் 84*, ஜோஸ் பட்லர் 75, யாசிர் ஷாஹ் 99/4

முடிவு – இங்கிலாந்து 3 விக்கெட்டுக்களால் வெற்றி 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<