டெஸ்ட் தரவரிசையில் முதல் மூன்றுக்குள் நுழைந்த ஸ்டுவர்ட் ப்ரோட்

215

சர்வதேச கிரிக்கெட் பேரவையினுடைய புதிய டெஸ்ட் தரவரிசை சற்று முன்னர் (29) வெளியிடப்பட்டதற்கமைய டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் முதல் மூன்று இடங்களுக்குள் புகுந்துள்ளார்.

கொரோனா வைரஸ் சவாலுக்கு மத்தியில் மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூடிய மைதானத்தில் (ரசிகர்கள் இன்றி) மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. குறித்த டெஸ்ட் தொடர் நேற்று (28) நிறைவுக்கு வந்த நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

>>டெஸ்ட் தொடரினைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி

இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவுபெற்ற நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது அதில் பிரகாசித்த வீரர்களின் அடிப்படையில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசையை புதுப்பித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் விமர்சனங்களை முன்வைத்த வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ரோட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் என மொத்தமாக 6 விக்கெட்டுக்களை பதம்பார்த்து 4 நிலைகள் உயர்ந்து முதல் பத்திற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் மீண்டும் மூன்றாவதும் இறுதியுமானதுமான போட்டியில் களமிறங்கிய ஸ்டுவர்ட் ப்ரோட் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகள் உள்ளடங்களாக போட்டியில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் முக்கிய புள்ளியாக திகழ்ந்தது மாத்திரமல்லாமல் இறுதி டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தெரிவானார்.

>>இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

இதன் மூலம் இரண்டாவது டெஸ்ட் போட்டி நிறைவில் பத்தாமிடத்தில் இருந்த ஸ்டுவர்ட் ப்ரோட் தற்போது டெஸ்ட் தொடர் நிறைவில் 7 நிலைகள் உயர்ந்து 823 தரவரிசை புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 2016 ஆகஸ்ட் மாதம் தென்னாபிரிக்க அணியுடனான தொடர் நிறைவுக்கு வந்த பின்னர் டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்தை தக்கவைத்த ஸ்டுவர்ட் ப்ரோட் மீண்டும் நான்கு வருடங்களின் பின்னர் மூன்றாமிடத்திற்கு சொந்தக்காரராகியுள்ளார்.

இதேவேளை நேற்று (28) நிறைவுக்கு வந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஸ்டுவர்ட் ப்ரோட் தனது 500 ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரராக ஸ்டுவர்ட் ப்ரோட் வரலாற்றில் இடம்பிடித்தார். இதற்கு முன்னர் மற்றுமொரு வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சன் 500 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதேவேளை ஸ்டுவர்ட் ப்ரோட் மூன்றாமிடத்திற்கு முன்னேறியதன் காரணமாகவும், மேற்கிந்திய தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் மூன்றாவது போட்டியிலும் பிரகாசிக்க தவறியதன் காரணமாக மூன்றாமிடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அது மாத்திரமல்லாது ஜேசன் ஹோல்டர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் பிரகாசிக்காத நிலையில் இரண்டாமிடத்திலிருந்து மூன்றாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டமை இங்கே குறிப்பிடத்தக்கது.

>>இங்கிலாந்தில் தமது கிரிக்கெட் உபகரணங்களை பறிகொடுக்கும் பாகிஸ்தான் அணி

பந்துவீச்சு மாத்திரமல்லாது துடுப்பாட்டத்திலும் அதிரடியை வெளிப்படுத்திய ஸ்டுவர்ட் ப்ரோட் முதல் இன்னிங்ஸில் 45 பந்துகளில் 62 ஓட்டங்களை குவித்து மூன்றாவது அதிவேக அரைச்சதத்தை கடந்து இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இடம்பிடித்தார். இதன் மூலம் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் 7 நிலைகள் உயர்ந்துள்ளார்.

மேலும் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகிய இரு துறைகளிலும் பிரகாசித்த ஸ்டுவர்ட் ப்ரோட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையிலும் மூன்று நிலைகள் உயர்ந்து 11 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<