உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரை அறிமுகப்படுத்தும் ஐசிசி

3095

சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிய ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் 30ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளதாக இன்று (27) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

குறித்த இந்த ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடர் எதிர்வரும் 30ம் திகதி ஆரம்பிக்கவுள்ள இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகும் என ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது. 

மோசமான சாதனைக்கு சொந்தக்காரர்களாகிய 5 பந்துவீச்சாளர்கள்!

இந்த தொடரானது 2023ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடருக்கான அணிகளை தெரிவுசெய்யும் முகமாக நடைபெறவுள்ளது. அதன்படி, போட்டித் தொடரில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறமுடியும்.  

மொத்தமாக 13 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கவுள்ளதுடன், 12 அணிகள் ஐசிசியின் முழு அங்கத்துவத்தை பெற்றுள்ள அணிகளும், 2015-17 ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் வெற்றிபெற்ற நெதர்லாந்து அணியும் தொடரில் மோதவுள்ளன. இதில், ஒவ்வொரு அணிகளும் சொந்த மண்ணில் 4 தொடர்களையும், வெளிநாட்டு மண்ணில் 4 தொடர்களிலும் விளையாடவுள்ளன. ஒவ்வொரு தொடர்களும் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக அமையும். 

ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் குறித்து கருத்து வெளியிட்ட ஐசிசியின் பொது முகாமையாளர் ஜெப் எலர்டைஸ் குறிப்பிடுகையில், “கடந்த உலகக் கிண்ண சம்பியனான இங்கிலாந்து அணியுடன் இந்த தொடரை ஆரம்பிக்கிறோம். அதன்படி, அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருடன், ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் ஆரம்பமாகும். 

இந்த லீக் தொடரானது 2023ம் ஆண்டு உலகக் கிண்ணம் வரை தகுதிகாண் போட்டிகளாக அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விளையாடப்படும். எனவே, கிரிக்கெட் ரசிகர்களுக்கு இதுவொரு மிகப்பெரிய விருந்தாக அமையும்.

அதேநேரம், கடந்தவாரம் 2023ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை அந்த ஆண்டின் இறுதிப்பகுதிக்கு பிற்போட்டிருந்தோம். அதன்மூலம் கொவிட்-19 வைரஸ் காரணமாக தடைப்பட்ட தகுதிகாண் போட்டிகளை எம்மால் நடத்துவதற்கான காலம் கிடைத்துள்ளது. எனவே, மைதானத்தில் நடைபெறும் போட்டிகள் மூலம் முடிவை பெறமுடியும்” என்றார்.

ஐசிசி புதிதாக ஆரம்பித்துள்ள ஐசிசி உலகக் கிண்ண சுப்பர் லீக் தொடரானது அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தொடருடன் ஆரம்பிக்கவுள்ளது. இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரானது எதிர்வரும் 30ம் திகதி ரோஸ் போவ்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க