ஒலிம்பிக்கை துரத்தும் கொரோனா: ஜப்பான் அதிகாரிகள் கவலை

213
Olympic
Getty Image

கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற காரணத்தால் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவது சந்தேகம் என அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளளனர். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 23ஆம் திகதி முதல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ஆம் திகதி வரை நடைபெறவிருந்தது.

கொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு

எனினும், உலகம் முழுவதும் வேகமாகப் பரவிய கொவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை ஒலிம்பிக் விளையாட்டு விழாவை அடுத்த வருடம் ஜூலை 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8ஆம் திகதி வரை நடத்துவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்திருந்தது. 

இந்த நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் யோஷிரோ மோரி, அந்த நாட்டின் என்.எச்.கே வானொலிக்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் 2021 இலும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதென்பது கடினம் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

”கொவிட் – 19 வைரஸ் பரவலானது தொடரும் பட்சத்தில் அடுத்த வருடமும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை நடத்துவதென்பது சந்தேகம் தான். அதேநேரம், அடுத்த வருடமும் இந்த வைரஸின் தாக்கம் இருக்குமானால் ஒலிம்பிக் விளையாட்டு விழாவானது இரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழு நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு குறித்து எம்மால் ஒன்றும் கூறமுடியாது.

Video – டிவில்லியர்ஸ் Comeback எப்போது? |Sports RoundUp – Epi 124

ஏனெனில், தற்போதைய சூழ்நிலையில் கொவிட் – 19 வைரஸின் தாக்கமானது இன்னும் ஒரு வருடத்துக்கு இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை.  

எனவே, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா நடக்கலாம் அல்லது நடக்காமல் போகலாம். இந்த உலகம் கொவிட் – 19 வைரஸை முதலில் வெல்ல வேண்டும். அதேபோல, முதலில் அந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை வழிகளை கண்டறிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.  

இதுஇவ்வாறிருக்க, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் போட்டி அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. 17 தினங்கள் நீடிக்கும் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் 33 வகையான விளையாட்டுப் போட்டிகளில் 339 நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன

இதில் ஸ்போர்ட் க்லைம்பிங், கடல் அலைச் சறுக்கல், ஸ்கேட்போர்டிங், கராத்தே, பேஸ்போல்சொவ்ட்போல் உள்ளிட்ட விளையாட்டுக்கள் முதல்தடவையாக நடைபெறவுள்ளளன.

2021இல் எளிமையான ஒலிம்பிக் விளையாட்டு விழா

இதில் குறிப்பாக, ஜூலை 23ஆம் திகதி நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஆரம்ப விழா வைபவத்துக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் ஜூலை 21ஆம் திகதி மென் பந்து மற்றும் மகளிருக்கான கால்பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. அதேபோல, 23ஆம் திகதி படகோட்டம், வில்வித்தை ஆகிய போட்டிகள் ஆரம்பமாகும்.  

இதேநேரம், டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் முதலாவது தங்கப் பதக்கம், ஜூலை 23ஆம் திகதி காற்றழுத்து துப்பாக்கி சுடுதல் நிகழ்ச்சிக்கு வழங்கப்படவுள்ளது.

அதேபோல, வில்வித்தை, வீதி சைக்கிளோட்டம், வாட்போர், ஜுடோ, டைக்வொண்டோ, பளுதூக்கல் ஆகிய போட்டிகளுக்கும் தங்கப் பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன

எதுஎவ்வாறாயினும், ஒலிம்பிக் விளையாட்டு விழா போட்டி அட்டவணையில் மாற்றம் ஏற்படலாம் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க