40 வீரர்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பிக்கும் இலங்கை

888

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த மாதம் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மற்றும் பல்லேகலை மைதானங்களில் முறையே 13 மற்றும் 24 வீரர்களை உள்ளடக்கி, குடியிருப்பு பயிற்சி முகாமை இரண்டு கட்டங்களாக வெற்றிகரமாக நடத்தியிருந்தது. 

இந்தநிலையில், தேசிய கிரிக்கெட் ஒப்பந்தத்தை பெற்றுள்ள 40 வீரர்களை 4 குழுக்களாக வகுத்து, அரசாங்கத்தின் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுடன்  மற்றுமொரு பயிற்சி முகாம் ஒன்றினை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

யூரோ T20 ஸ்லேம் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

கொவிட்-19 வைரஸ் காரணமாக ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிகள் கடந்த மார்ச் மாதத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இப்போது, பயிற்சிக்கான குழுக்கள் A முதல் D வரை பெயரிடப்பட்டுள்ளன. இதில் 12 வீரர்கள் கொண்ட அபிவிருத்தி குழாம் ஒன்று E என்ற குழுவில் இடம்பெற்று பயிற்சி வசதிகளை பயன்படுத்தவுள்ளது.

அரசாங்கத்தின் சுகாதார ஆலோசனைகளின் படி, அனைத்து வீரர்களும் ஒரே நேரத்தில் பயிற்சிகளில் ஈடுபட முடியாது. எனவே, A குழாம் உடற்பயிற்சி அறையில் பயிற்சிகளை பெறும் போது, B குழாம் வலைப்பயிற்சிகளில் ஈடுபடும். பயிற்சிகள் அதிகமாக 2 மணித்தியாலங்கள் மாத்திரமே மேற்கொள்ளப்படும்.

இதில், சிரேஷ்ட வீரர்களான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணித்தலைவராக செயற்பட்டு வரும் திமுத் கருணாரத்ன, T20 அணியின் தலைவர் லசித் மாலிங்க, முன்னாள் தலைவர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் விஷேட பயிற்சி அட்டவணையின் கீழ் பயிற்சிகளில் ஈடுபடுவர்.

இலங்கை அணிக்காக அடுத்த தொடர் இதுவரையில் உறுதிசெய்யப்படாத நிலையில், கொவிட்-19 வைரஸிற்கு பின்னர், சர்வதேச போட்டிகளுக்கு முழுமையான தயார்படுத்துவதற்கான பயிற்சிகள் இந்த பயிற்சி முகாமில் வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் எதிர்வரும் 25ம் திகதியின் போது, முழுமையான சர்வதேச கிரிக்கெட்டுக்காக தயாராகிவிடுவோம். கொவிட்-19 வைரஸிற்கு பின்னர் ஆரம்பமாகும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுமையாக தயாராக வேண்டும் என்பதே எமது முதல் நோக்கமாகும்” என மிக்கி ஆர்தர் குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் சபையாக இலங்கை மாறியுள்ளது. முக்கியமாக இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணத் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச கிரிக்கெட் வாரியம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த T20  உலகக் கிண்ணத் தொடரை ஒத்திவைத்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் சபை தற்போது, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபையுடன் ஈடுபட்டு வருகின்றது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<