இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில்

838

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இந்த (2020) ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது.   

T20 உலகக் கிண்ணம் ஒத்திவைப்பு: ஐ.சி.சி அறிவிப்பு

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் மார்ச் மாதம் நடைபெறவிருந்த நிலையில் கொவிட்-19 வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தன. எனினும், இந்தியாவில் கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழுமையாக குறையாத சந்தர்ப்பத்தில் அங்கே ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவதில் சிக்கல்கள் நிலவுகின்றன. 

அதேநேரம், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்தமால் விடுவது பி.சி.சி.ஐ இற்கு மிகப் பெரிய நிதி நெருக்கடியினை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனவே, பி.சி.சி.ஐ. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை இந்தியா அல்லாத வேறொரு நாட்டில் நடாத்துவது தொடர்பில் ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தது. 

நிலைமைகள் இவ்வாறு இருக்க இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளை நடாத்தக்கூடிய நாடுகளாக இருக்க கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலையே, ஐக்கிய அரபு இராச்சியத்தினை பி.சி.சி.ஐ. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவதற்கான நாடாகத் தெரிவு செய்திருக்கின்றது.

இதேநேரம், ஐ.பி.எல். போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடாத்துவதற்கான அரசாங்க அனுமதியினை கேட்டிருப்பதாக ஐ.பி.எல். தொடரின் தலைவரான பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்தார். 

”நாங்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் (இந்த) தொடரினை நடாத்துவதற்கான அனுமதியினை அரசாங்கத்திடம் கேட்டிருக்கின்றோம்.”

மேலும் கருத்து வெளியிட்ட பட்டேல், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரினை எந்த திகதிகளில் நடாத்துவது என்பது தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். 

டெஸ்ட் சகலதுறை தரப்படுத்தலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஸ்டோக்ஸ்

ஐ.சி.சி. இனால் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் இரத்துச் செய்யப்பட்டதனை அடுத்து குறித்த T20 உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவிருந்த அதே காலப்பகுதியில் ஐ.பி.எல். போட்டிகள் நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அதேவேளை, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடரின் சில போட்டிகளை இந்திய மண்ணில் நடாத்துவது தொடர்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<