உயிரியல் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றச்சாட்டில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜொப்ரா ஆர்ச்சர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியினர் அங்கே ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக அங்கே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகின்றனர். இந்த டெஸ்ட் தொடரின் போட்டிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இன்றிய கிரிக்கெட் அரங்குகளில் உயிரியல் பாதுகாப்புடன் நடைபெறுகின்ற இத்தருணத்தில், குறித்த டெஸ்ட் தொடருக்காக விதிக்கப்பட்ட உயிரியல் பாதுகாப்பு விதிகளில் ஒன்றினை மீறிய குற்றச்சாட்டிலேயே ஜொப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்.
இதேநேரம், இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மன்செஸ்டர் நகரில் இன்று (16) ஆரம்பமாகவிருக்கும் நிலையிலையே ஜொப்ரா ஆர்ச்சர் குறித்த டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் விடயம் வெளியாகியிருக்கின்றது.
அதேநேரம், தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியாக்கப்பட்டுள்ள ஜொப்ரா ஆர்ச்சர் அடுத்த ஐந்து நாட்களுக்கும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகளுக்கும் முகம் கொடுக்கவுள்ளார். இந்த பரிசோதனைகளில் வரும் முடிவுக்கு அமைய ஜொப்ரா ஆர்ச்சர், இந்த டெஸ்ட் தொடரில் தொடர்ந்து விளையாடுவது தொடர்பிலான முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, ஆர்ச்சர் தொடர்பில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய வீரர்களுக்கு துபாயில் பயிற்சி
இந்நிலையில் ஜொப்ரா ஆர்ச்சர் தான் உயிரியல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக மன்னிப்பு கோரியிருக்கின்றார்.
”நான் செய்த விடயத்திற்கு (மிகுந்த மனவேதனையுடன்) மன்னிப்பு கோருகின்றேன்.”
”நான் என்னை மட்டுமில்லாது, (இங்கிலாந்து) அணி, அணி முகாமைத்துவக் குழு என அனைவரினையும் ஆபத்துக்குள்ளாக்கியிருக்கின்றேன். நான் எனது தவறுக்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்வதோடு, உயிரியல் பாதுகாப்பு வட்டத்தில் உள்ள அனைவரிடமும் எனது மன்னிப்பை மனமுவந்து கேட்டுக்கொள்கின்றேன்.”
”தொடரின் முக்கிய தருணமொன்றில், (இன்றைய) டெஸ்ட் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை இழப்பது மனவேதனை தருகின்றது. நான் இரண்டு அணிகளையும் வீழ்த்திவிட்டது போல உணர்கின்றேன். (எனவே) மீண்டுமொரு முறை நான் மன்னிப்பு கேட்கின்றேன்.” என ஆர்ச்சர் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து தொடருக்கான உத்தேச குழாத்தை அறிவித்த ஆஸி.!
இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் இடையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி தோல்வியடைந்த போதும், குறித்த போட்டியில் ஆர்ச்சர் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றி சிறந்த முறையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க