தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் புதிதாக 6 பேருக்கு கொவிட் 19 தொற்று

406

தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று அணிகள் ஒரே போட்டியில் மோதும் 3டி  என்கிற புதிய வகை கிரிக்கெட் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது   

சொலிடரிட்டி கிண்ணம் என்ற பெயரில் தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான எதிர்வரும் 18ஆம் திகதி 3டி கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது

தென்னாபிரிக்கா கிரிக்கெட்டில் ஏழு பேருக்கு கொரோனா வைரஸ்

அந்த நாட்டில் உள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்தத் தொடரின் மூலம் கிடைக்கப்பெறும் வருமானத்தை கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதன்படி, குறித்த தொடரானது எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை செஞ்சூரியனில் உள்ள சுப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸுக்குப் பிறகு தென்னாபிரிக்காவில் நடைபெறுகின்ற முதலாவது கிரிக்கெட் தொடர் இதுவாகும்

இதனிடையே, 3டி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 50 பேரிடம் கடந்த 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது

இதில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது

ஆனால், இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள எந்தவொரு வீரருக்கும் கொரோனா வைரஸ் இல்லை எனவும் அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதன்படி, கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஆறு பேரையும் அந்நாட்டு சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலில் படி தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் மருத்துவ குழுவும் மேற்பார்வை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தென்னாபிரிக்காவின் உள்ளூர் வீரர்களை உள்ளடக்கிய மூன்று அணிகள் இந்த போட்டித் தொடரில் விளையாடவுள்ளதுடன், அணிகளில் தலா 8 வீரர்கள் விளையாடவுள்ளனர்

கிங்பிஷர்ஸ், கைட்ஸ் மற்றும் ஈகல்ஸ் ஆகிய அணிகள் இந்தத் தொடரில் களமிறங்கவுள்ளதுடன், கிங்பிஷர்ஸ் அணியின் தலைவராக கங்கிஸோ ரபாடா, கைட்ஸ் அணியின் தலைவராக குயிண்டன் டி கொக் மற்றும் ஈகல்ஸ் அணியின் தலைவராக ஏபி.டி.வில்லியர்ஸ் ஆகியோர் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3TC கிரிக்கெட் போட்டியின் திகதி அறிவிப்பு

முன்னதாக கடந்த ஜூன் மாதம் இறுதிப் பகுதியில் தென்னாரிக்கா கிரிக்கெட் சபை தனது நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் ஏழு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

அண்மையில், பங்களாதேஷில் 3 கிரிக்கெட் வீரர்களுக்கு வைரஸ் தோற்று இருப்பது உறுதியானது. அதற்கு முன்பாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சஹீட் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<