முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து குழாம் அறிவிப்பு

296

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் சொந்த மண்ணில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் 13 வீரர்கள் அடங்கிய அணி மற்றும் 9 மேலதிக வீரர்களின் பெயர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் இன்று (4) அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகை உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டி இடைநடுவில் கைவிடப்பட்டதிலிருந்து இதுவரையில் எந்தவித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இங்கிலாந்து அணி இறுதியாக இருதரப்பு தொடரில் விளையாடுவதற்காக இலங்கை வந்திருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பயிற்சிப்போட்டியுடன் அவசரமாக நாடு திரும்பியது. 

மே.தீவுகள் டெஸ்ட் குழாத்தில் இணைந்த ஷெனொன் கேப்ரியல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் குழாத்தில், மேற்கிந்திய தீவுகளின் முன்னணி…

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னர் முதல் முதலாக நடைபெறுகின்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியாக சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அமைந்துள்ளது. மிகுந்த சவால்களுக்கு மத்தியில் மூடிய மைதானத்தில் நடைபெறவுள்ள குறித்த தொடர், கொரோனாவுக்கு பின்னரான முதல் தொடர் என்ற காரணத்தினால் முழு உலகமும் குறித்த போட்டியை எதிர்பார்த்துள்ளது. 

குறித்த டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் மேற்கிந்திய தீவுகள் குழாம் இங்கிலாந்து வந்தடைந்து, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் தொற்றுக்கான பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் குறித்த மேற்கிந்திய தீவுகள் குழாம்  மைதானத்தில் களமிறங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேபோன்று இங்கிலாந்து குழாமும் தனிமைப்படுத்தப்பட்டு மேற்குறிப்பிட்ட விதிமுறைகளின் பிரகாரம் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக ஆரம்பத்தில் 30 பேர் அடங்கிய இங்கிலாந்து பயிற்சி குழாம் அறிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் குறித்த 30 வீரர்களும் கொரோனா பரிசோதனைகளின் பின்னர் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் புதன்கிழமை (8) ஆரம்பமாகவுள்ள முதல் டெஸ்ட் போட்டிக்காக குறித்த 30 வீரர்களிலிருந்து 13 வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வழமையான அணித்தலைவராக ஜோ ரூட் செயற்பட்டு வருகின்றார். இந்நிலையில் குறித்த முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகின்ற காலப்பகுதியில் ஜோ ரூட்டுக்கு இரண்டாவது குழந்தை கிடைக்கவுள்ளதன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் ரூட் பங்கேற்கமாட்டார் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது முதல் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் பெயரிடப்பட்டுள்ளார். 

சங்கா, மஹேலவை விசாரணை செய்ய நான் கூறவில்லை – மஹிந்தானந்த அளுத்கமகே

2011 உலகக் கிண்ணத்தில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளது தொடர்பாக விளையாட்டில் மோசடிகளைத் தவிர்க்கும்…

விக்கெட்காப்பாளர் ஜொஸ் பட்லர் அணியின் உபதலைவராக பெயரிடப்பட்டுள்ளார். குறித்த குழாமில் எதிர்பார்க்கப்பட்ட வீரரான விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொனி பெயர்ஸ்டோ முதல் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. அத்துடன் டெஸ்ட் போட்டிகளுக்கு தற்காலிக விடைகொடுத்து மீண்டும் 30 பேர் கொண்ட பயிற்சி குழாமில் இடம்பெற்றிருந்த சகலதுறை வீரர் மொயின் அலியும் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக கைவிடப்பட்ட இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது விக்கெட்காப்பாளராக குழாமில் இடம்பெற்றிருந்த பென் போக்ஸ் முதல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். இருந்தாலும் முதல் போட்டிக்காக ஒதுக்கப்பட்ட 9 வீரர்களில் ஒருவராக பென் போக்ஸ் இடம்பெற்றுள்ளார். கைவிடப்பட்ட இலங்கை அணியுடனான தொடரில் உபாதை காரணமாக குழாமில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த ரோரி பேன்ஸ் மேற்கிந்திய தீவுகளுடன்  முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

மேலும் வேகப்பந்துவீச்சாளர்களான ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் மற்றும் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாமில் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை சாம் கரன், ஜேம்ஸ் பிரேஸி, பென் போக்ஸ், டான் லோரன்ஸ், ஜெக் லீச், ஸாகிப் மஹ்மூத், க்ரேக் ஓவர்டொன், ஒலி ரொபின்ஸன் மற்றும் ஒல்லி ஸ்டோன் ஆகிய 9 வீரர்கள் மேலதிக (ஒதுக்கப்பட்ட) வீரர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

முதல் டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இங்கிலாந்து குழாம்

பென் ஸ்டோக்ஸ் (அணித்தலைவர்), ஜேம்ஸ் அண்டர்சன், ஜொப்ரா ஆர்ச்சர், டோமினிக் பெஸ், ஸ்டுவர்ட் ப்ரோட், ரோரி பேன்ஸ், ஜொஸ் பட்லர் (விக்கெட்காப்பாளர்), ஷக் க்ரௌலி, ஜோ டென்லி, ஒலி போப், டொம் சிப்லேய், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்  

டெஸ்ட் தொடர் அட்டவணை

ஜூலை 8-12 – முதல் போட்டி – சவுத்தம்ப்டண்

ஜூலை 16-20 – இரண்டாவது போட்டி – ஓல்ட் ட்ரப்ட், மென்செஸ்டர்

ஜூலை 24-28 – மூன்றாவது போட்டி – ஓல்ட் ட்ரப்ட், மென்செஸ்டர்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க