பாகிஸ்தான் வீரர்களுக்கு லாகூரில் கொரோனா பரிசோதனை

188

இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.   

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 3 டெஸ்ட் மற்றும் மூன்று T20i  போட்டிகளில் விளையாடுவதற்காக எதிர்வரும் 28ஆம் திகதி லாகூரில் இருந்து தனி விமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். இதற்கான பாகிஸ்தான் குழாத்தில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்த வஹாப் ரியாஸ்

இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், பயிற்சி உதவியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது

இதன்படி, எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட்கிழமை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும்.  

அதன் பிறகு வீரர்கள் அனைவரும் 24ஆம் திகதி புதன்கிழமை லாகூரில் ஒன்றிணைவார்கள். அங்கு 2ஆவது முறையாக பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்படும்

பிறகு லாகூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுடன் வீரர்கள் சில நாட்கள் தனித்தனியே தங்கியிருப்பார்கள்.  

பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.  

இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலதிகமாக தன்னுடைய மனைவி சானியா மிர்சா மற்றும் மகன் இஸ்ஹான் ஆகியோரைப் பிரிந்து பாகிஸ்தானில் தங்கியுள்ள சொஹைப் மலிக்கிற்கு இந்தியா சென்று வருவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசேட அனுமதி அளித்துள்ளது.  

இதன்படி, சொஹைப் மலிக் இந்தியா சென்று தனது குடும்பத்தாரை சந்தித்து ஒரு சில நாட்கள் தங்கிவிட்டு எதிர்வரும் ஜுலை மாதம் 24ஆம் திகதி அங்கிருந்து இங்கிலாந்து வந்து பாகிஸ்தான் அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…