T20 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொள்ளாது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுமா?

227
BCCI

T20 உலகக் கிண்ணத்தை கருத்திற் கொள்ளாது, இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) தீர்மானம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

>> ஐ.பி.எல். போட்டிகள் இந்தியாவுக்கு வெளியில் நடக்கும் சாத்தியம்?

உலகில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த பல முக்கிய கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதில், இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளும் அடங்கும். எனினும், ஒத்திவைக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்தாமல் போவது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைக்கு பெரும் வருவாய் இழப்பினை ஏற்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 

மறுமுனையில், சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ICC) அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் மாதம் இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரினை நடாத்துவது பற்றிய இறுதி முடிவை இந்த வாரத்தில் அறிவிக்கும் எனக் கூறியிருக்கின்றது. 

இவ்வாறாக, T20 உலகக் கிண்ணம் தொடர்பிலான சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் இறுதி முடிவு வெளியாகாத நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை, ஐ.பி.எல். போட்டிகளை இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடாத்த ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக செயற்படும் சௌரவ் கங்குலி, ஐ.பி.எல். போட்டிகள் பற்றிய தீர்மானம் மிக விரைவில் எடுக்கப்படும் என இந்திய செய்திச் சேவையான டைம்ஸ் ஒப் இந்தியாவிற்கு வழங்கிய கடிதம் ஒன்றின் மூலம் நேற்று (10) குறிப்பிட்டிருக்கின்றார். அதேநேரம், சுகாதார பிரச்சினைகள் கருதி இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகள் பார்வையாளர்கள் இன்றிய மைதானங்களில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI), இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவதற்குரிய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இது பார்வையாளர்கள் இன்றிய அரங்குகளில் நடாந்தாலும் பரவாயில்லை. கிரிக்கெட் வீரர்கள், இரசிகர்கள், அணிகள், போட்டிகளை ஒளிபரப்புச் செய்யும் நிறுவனங்கள், அனுசரணையாளர்கள் என அனைவரும் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவது தொடர்பில் ஆர்வத்துடன் காணப்படுகின்றனர்.” என சௌரவ் கங்குலி குறிப்பிட்டார். 

குறித்த கடிதத்தில் இன்னும் கருத்து வெளியிட்ட கங்குலி, மிக அண்மையில், இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி, கிரிக்கெட் வீரர்கள் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். எனவே, இது தொடர்பில் நாம் நேர்மறையான எண்ணம் ஒன்றுடன் இருப்பதோடு, மிக விரைவில (ஐ.பி.எல்.) போட்டிகள் தொடர்பான முடிவு ஒன்றினை எடுக்கவுள்ளோம்.”  எனத் தெரிவித்திருந்தார். 

இதேநேரம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஐ.பி.எல். போட்டிகளை நடாத்துவதற்கான கால இடைவெளி ஒன்றினை சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எதிர்பார்த்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது. 

>> சத்திரசிகிச்சை செய்யத் தவறியுள்ள ஹஸன் அலி

எது எவ்வாறாயினும், இன்னும் ஓரிரு நாட்களில் எந்த கிரிக்கெட் தொடர் (T20 உலகக் கிண்ணமா? அல்லது ஐ.பி.எல். போட்டிகளா?) நடைபெறும் சாத்தியம் என்பது பற்றி தெரியவரும் என நம்பப்படுகின்றது.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<