பார்சிலோனாவில் கொரோனா தொற்றிய வீரர்கள் பற்றி அம்பலம்

181
Five barcelona players tested positive

ஸ்பெயினின் பார்சிலோனா கழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் பணிக் குழுவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்ததாகவும் அதனை அவர்கள் வெளியிடாமல் இராகசியமாக வைத்திருந்ததாகவும் அந்நாட்டு வானொலி ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. 

>> ப்ரீமியர் லீக் கழகங்களில் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

வைரஸ் தொற்றி இருப்பதாக கூறப்படும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பெயர்களை வெளியிடாமல், இது பற்றி பார்சிலோனாவின் கடலோனா பிராந்திய வானோலிச் சேவையான RACI இனால் நடத்தப்படும் ‘Tu Diras’ நிகழ்ச்சியில் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

கொவிட்-19 தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இரத்தப் பரிசோதனை ஊடாக இந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியிருப்பதாக தெரியவந்துள்ளது. அவர்கள் இதன்போது எந்த நோய் அறிகுறியையும் வெளிப்படுத்தவில்லை என்றும் அவர்கள் அனைவரும் தற்போது அந்த நோயில் இருந்து முழுமையாக குணமடைந்திருப்பதாகவும் அந்த நிகழ்ச்சியில் மேலும் தெரியவந்தது.  

எவ்வாறாயினும் இது பற்றி ஸ்பெயினின் லா லிகா லீக் போட்டி தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட உத்தியோகபூர்வ அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. மே மாத ஆரம்பத்தில் அணியின் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டபோது, தமது வீரர்கள் அனைவரும் குறித்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அதன்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எவரும் இருக்கவில்லை என்றும் வெளியான உத்தியோகபூர்வ அறிக்கையில் பார்சிலோனா அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர்

அதேபோன்று எதிர்வரும் நாட்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள லா லிகா தொடருக்கு பார்சிலோனா அணியின் அனைத்து வீரர்களும் தயாராக இருப்பதாகவும் இதன்போது உறுதி செய்யப்பட்டிருந்தது.  

எவ்வாறாயினும் இந்த வைரஸ் தொற்றிய வீரர்களுக்கு அதன்மூலம் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பில் பார்சிலோனா கழக உயர் அதிகாரிகள் அதிக அவதானத்துடன் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.   

இந்தச் செய்தி தொடர்பில் பார்சிலோனா கழகம் இன்னும் உத்தியோகபூர்வ அறிக்கை எதனையும் வெளியிடாதபோதும் வானொலி ஊடாக இது பற்றி வெளிச்சத்திற்கு வந்த பின் அந்நாட்டின் பிரபல கால்பந்து நிகழ்ச்சியான ‘El Chiringuito de Jugones’  உட்பட மேலும் பல நிகழ்ச்சிகள் மற்றும் ஊடகங்கள் பலதும் இது பற்றி செய்தி வெளியிட்டுள்ளன.  

பார்சிலோனா நகரத்தை அடிப்படையாகக் கொண்ட மற்ற முன்னணி  கழகமான எஸ்பன்யோல் அணியின் 8 வீரர்கள் மற்றும் இரு பயிற்சியாளர்கள் என 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை அந்தக் கழகத்தின் முகாமையாளர் எபெர்லார்டோ பெர்னாண்டஸ் அன்டுன் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.  

லா லிகா தொடரை இம்மாதம் 12 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு ஏற்பாடுகள் தாயாராக இருக்கும் நிலையிலேயே இந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பார்சிலோனா அணி முதல் போட்டியில் இம்மாதம் 14 ஆம் திகதி மலோர்கா அணியை எதிர்கொள்ளவுள்ளது.  

பார்சிலோனா கழகம் தமது முழுமையான பயிற்சி நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதோடு லா லிகா தொடரில் இதுவரை 27 போட்டிகளில் ஆடி இருக்கும் அந்த அணி 58 புள்ளிகளுடன் ரியல் மெட்ரிட்டை விடவும் 2 புள்ளிகள் அதிகமாகப் பெற்று முதலிடத்தில் உள்ளது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<