உமிழ்நீர் தடைக்கு மாற்றுவழி வேண்டும் என்கிறார் ஜஸ்ப்ரிட் பும்ரா

199
Bumra

கொவிட்-19 வைரஸ் காரணமாக எதிர்வரும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில், பந்துவீச்சாளர்கள் உமிழ்நீர் (எச்சில்) இடுவதை தடைசெய்ய ஐசிசி கிரிக்கெட் சபை தீர்மானித்திருந்தது. 

இந்தநிலையில், பந்தில் எச்சிலிடுவதை ஐசிசி தடுத்திருந்த போதிலும், அதற்கு மற்றுமொரு மாற்று வழிமுறையை ஐசிசி கண்டறிய வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரிட் பும்ரா தெரிவித்துள்ளார்.

>> உலகக் கிண்ணத்தில் விக்கெட் காப்பாளராக சாதித்த சங்கக்கார!

கிரிக்கெட் போட்டிகளில் பந்தினை புதிதாக்குவதற்கு பந்துவீச்சாளர்கள் பந்தின் மீது எச்சிலிட்டு, அதனை தேய்த்து புதிதாக்குவர். இதன்மூலம் பந்துவீச்சாளர்கள் பந்தினை ஸ்விங் செய்வதற்கு இலகுவாக இருக்கும். எனவே, போட்டியில் எச்சிலிடுவதை தடைசெய்துள்ளதால், மாற்று வழியொன்றை அறிவிக்குமாறு பும்ரா தெரிவித்துள்ளார். 

அதுமாத்திரமின்றி, சர்வதேச போட்டியின் போது, வீரர்கள் ஒருவொருக்கொருவர் கட்டிப்பிடித்தல் மற்றும் கைகளை பிடித்து கொண்டாடுதல் போன்றவற்றையும் ஐசிசி தடைசெய்துள்ளது. 

இதுதொடர்பில் தனது கருத்தினை பகிர்ந்துக்கொண்ட ஜஸ்ப்ரிட் பும்ரா, பந்தினை புதிதாக்குவதற்காக மாற்றுவழி ஒன்றை ஐசிசி கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டார்.

“நான் அதிகமாக கட்டிப்பிடித்தல் மற்றும் கைகளை பிடித்து கொண்டாட மாட்டேன். இதில், எனக்கு அதிகளவில் ஈடுபாடு கிடையாது. அதனால், இதுபோன்ற தீர்மானங்களில் எனக்கு சிக்கல்கள் இல்லை. 

ஆனால், பந்தில் எச்சிலிட்டு, பந்தை புதிதாக்குவதில் எனக்கு சற்று ஈடுபாடு உள்ளது. சர்வதேச போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், எவ்வாறான புதிய கட்டுப்பாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் வரும் என்பது எனக்கு தெரியாது. எனினும், பந்தில் எச்சிலிடுவதற்கு பதிலாக மாற்றுவழி ஒன்றை கண்டறிய வேண்டும் என தோன்றுகிறது. 

சர்வதேச போட்டிகளை பொருத்தவரை மைதானங்கள் இருப்பதை விட சிறிதாகி வருகின்றது. ஆடுகளங்களும் இருந்ததைவிட தட்டையான ஆடுகளங்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, பந்துவீச்சாளர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பந்தின் தன்மையை மாற்றியமைப்பதற்கான மாற்றுவழி ஒன்று தேவை. அதன்மூலம் பந்துவீச்சாளர்கள் சற்று பலம் பெற முடியும். குறிப்பாக பந்தினை ஸ்விங் செய்யவும், ஆட்டத்தின் இறுதியில், ரிவர்ஸ் ஸ்விங் செய்யவும் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க, மாற்று வழி ஒன்று தேவை” என குறிப்பிட்டார்.  

ஐசிசியின் காணொளி தொகுப்புக்காக இயன் பிஷோப் மற்றும் ஷோன் பொல்லக் ஆகியோர் மேற்கொண்ட காணொளி நேர்காணலின் போதே, ஜஸ்ப்ரிட் பும்ரா மேற்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார். 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<