ப்ரீமியர் லீக் போட்டிகள் ஜூன் 17 இல் ஆரம்பம்

159

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட இங்கிலாந்து ப்ரீமியர் லீக் போட்டிகளை எதிர்வரும் ஜூன் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு கழகங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. போட்டிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வியாழக்கிழமை (28) இடம்பெற்ற கழகங்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

>> ப்ரீமியர் லீக் கழகங்களில் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இதில் இன்னும் 10 போட்டிகள் எஞ்சி இருக்கும் நான்கு அணிகளுக்கு இடையிலான போட்டிகளே முதல் நாளில் இடம்பெறவுள்ளன. இதன்படி மன்செஸ்டர் சிட்டி மீள ஆரம்பிக்கப்படும் முதல் போட்டியாக ஆர்சனலை எதிர்கொள்ளவிருப்பதோடு செபில்ட் யுனைடட் கழகம், அஸ்டன் வில்லாவை எதிர்கொள்ளவுள்ளது.    

அடுத்து எஞ்சும் 90 போட்டிகளும் ஜூன் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும். அனைத்து போட்டிகளும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருப்பதோடு வார இறுதியில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது

இதில் ஜூலை 11 ஆம் திகதி அரையிறுதிப் போட்டியுடன் FA கிண்ண இறுதிப் போட்டியை ஓகஸ்ட் முதலாம் திகதி நடத்துவதற்கு வசதியாக லீக் போட்டிகளை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. FA கிண்ண காலிறுதிப் போட்டிகள் ஜூன் 27 வார இறுதியில் நடத்தப்படவுள்ளது.  

போட்டிகள் ஆரம்பிக்கும் நேரங்கள் குறித்த விபரமும் வெளியாகியுள்ளது. வார இறுதிப் போட்டிகள் 10 வெவ்வேறு நேர இடைவெளிகளில் நடைபெறவிருப்பதோடு திங்கள் முதல் வெள்ளி வரை செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை மாலைகளில் போட்டிகள் நடைபெறும். இதனால் இந்தப் பருவம் முடியும் வரை வார நாள் இரவுகளிலும் போட்டிகளை எதிர்பார்க்கலாம்.  

எனினும், முறையான பாதுகாப்பு செயற்பாடுகள் மற்றும் ஏனைய விடயங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னரே போட்டிகள் நடத்தப்படும் நிலையில் போட்டிகளுக்கான அனைத்து திகதிகளும் தற்காலிகமானவையாக கருதப்படுகிறதுஇங்கிலாந்தில் மீண்டும் கால்பந்தை தொடங்குவதற்கு இன்னும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டி உள்ளது

குறிப்பாக, போட்டிகளை மீள ஆரம்பிப்பதில் இன்னும் பல விடயங்கள் குறித்து கழகங்களுக்கு இடையே தீர்வு காணப்படவேண்டி உள்ளது.  

எவ்வாறாயினும் இங்கிலாந்தில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான முடக்க நிலை தளர்த்தப்பட்டிருக்கும் சூழலில் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு வெளியில் ரசிகர்கள் கூடும் வாய்ப்பு இருப்பதால் முக்கிய போட்டிகள் பொதுவான மைதானத்திலேயே நடத்துவதற்கு சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது

இதன்படி லிவர்பூல் அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடுவதற்கு எஞ்சி இருக்கும் கிறிஸ்டல் பெலஸ், அ்ஸ்டன் வில்லா, பர்ன்லி மற்றும் செல்சி அணிக்கு எதிரான போட்டிகளை பொது மைதானத்தில் நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ப்ரீமியர் லீக் புள்ளிப் பட்டியலில் 25 புள்ளிகள் இடைவெளியுடன் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தும் லிவர்பூல் 30 ஆண்டுகளின் பின் சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு இன்னும் இரண்டு போட்டிகளில் வென்றால் போதுமானது.  

>> கொரோனாவின் பின் கால்பந்து போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

இந்நிலையில் லிவர்பூல் அணி இம்முறை ப்ரீமியர் லீக் பட்டத்தை பொது மைதானம் ஒன்றிலேயே வெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  

எனினும் இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில் இன்னும் தீர்வுகாணப்படாத சிக்கல்கள் குறித்து வரும் ஜூன் 4ஆம் திகதி நடைபெறவிருக்கும் கழகங்களுக்கு இடையிலான சந்திப்பில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததை அடுத்து ஏனைய பிரதான கால்பந்து போட்டிகள் போன்று ப்ரீமியர் லீக் போட்டிகளும் கடந்த மார்ச் 13 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டன.

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<