விளையாட்டுத்துறை அமைச்சுக்கு SLC இனால் பி.சி.ஆர் இயந்திரம் கையளிப்பு

153

கொரோனா தொற்று அபாயம் முடிவுக்கு வந்த பிறகு இலங்கையில் விளையாட்டை மீண்டும் ஆரம்பிக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோனையை மேற்கொள்ள பி.சி.ஆர் இயந்திரம் உள்ளிட்ட வைத்திய உபகரணங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) விளையாட்டுத்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது.

பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு SLC நிதியுதவி  

விளையாட்டுத்துறை அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஷம்மி சில்வா உள்ளிட்ட அதிகாரிகளால் விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (26) கையளிக்கப்பட்டது

டொரின்டனில் உள்ள விளையாட்டு வைத்திய நிறுவகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா

”விளையாட்டுத்துறை அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய நாங்கள் இந்த பி.சி.ஆர் உபகரணத்தை கையளித்துள்ளோம். இலங்கையில் மீண்டும் விளையாட்டுக்களை ஆரம்பிக்க வேண்டுமானால் இவ்வாறான உபகரங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதை நாங்கள் தேசிய பொறுப்பாக நினைத்து உதவியுள்ளோம்

உண்மையில் ஒரு பி.சி.ஆர் இயந்திரம் சாதாரணமாக 6 அல்லது 7 மில்லியன் ரூபா இருக்கும். அதேபோல பாதுகாப்பு ஆடைகளும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்

எனவே, அதற்கான பணத்தினை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்க முன்வந்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என தெரிவித்தார்

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட பி.சி.ஆர் இயந்திரத்தை தேசிய வைத்தியசாலைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ர தெரிவித்தார்

இதன்படி, தேசிய சங்கங்களில் உள்ள விளையாட்டு வீரர்கள் தேசிய வைத்தியசாலைக்குச் சென்று தங்களுக்கான கொரோனா பரிசோதனைகளை இலவசமாக செய்து கொள்ள முடியும்.  

முன்னதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஜனாதிபதியின் கொவிட்-19 சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு 250 மில்லியன் ரூபா நிதி கையளிக்கப்பட்டது.  

இதுஇவ்வாறிருக்க, கொரோனா வைரஸுக்குப் பிறகு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் இலங்கையில் கிரிக்கெட், றக்பி மற்றும் கால்பந்து உள்ளிட்ட பயிற்சிகளை ஆரம்பிக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<