செப்டம்பரில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்த முஸ்தீபு

173

2021 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் அவதானம் செலுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் விளையாட்டுப் போட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இருந்து .பி.எல் தொடர் வரை ஒத்திவைக்கப்பட்டது. குறிப்பாக, ஓக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ணம் நடைபெறுமா என்ற சந்தேகத்தில் உள்ளது

>> உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2022க்கு ஒத்திவைப்பு

இந்த நிலையில், உலக மெய்வல்லுனர் தொடர்களைப் போல உள்ளூர் மெய்வல்லுனர் தொடர்களும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான மெய்வல்லுனர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.    

இதனிடையே, இலங்கை மெய்வல்லுனர் அணியின் பிரதான பயிற்சியாளரான வை.கே குலரத்ண ThePapare.com க்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் மெய்வல்லுனர் சம்மேளனத்துடன் இணைந்து மிக விரைவில் மெய்வல்லுனர் விளையாட்டை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், பெரும்பாலும் இவ்வருட இறுதியில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்

இதுதொடர்பில் அவர் கூறுகையில், தேசிய மட்டத்தில் உள்ள வீர, வீராங்கனைகள் இக்காலப்பகுதியில் வீடுகளில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த வீரர்களை மீண்டும் மைதானங்களுக்கு கொண்டு வருவதற்காக மிகப் பெரிய வேலைத்திட்டங்களை இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் முன்னெடுத்து வருகின்றது’ அவர் தெரிவித்தார்

வை.கே குலரத்ண

இந்த நிலையில், இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில்

>> ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடு அறிவிப்பு

“மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீண்டும் மைதானத்துக்கு கொண்டு வருவதற்கு குறுந்தூர ஓட்டம் மற்றும் பாய்தல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் வீரர்கள் (Sprinters & Jumpers), மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றும் வீரர்கள் (Middle-distance runners), எறிதல் நிகழ்ச்சிகளில் (Throwers) பங்குபற்றும் வீரர்கள் என மூன்று பிரிவுகளாக பயிற்சிகளை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.  

அதன்படி, குறுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கான பயிற்சி முகாம் தியதலாவ பகுதியிலும், மத்திய தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கு தியதலாவ மற்றும் பொரலந்த பகுதியிலும், பாய்தல் மற்றும் எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுகின்ற வீரர்களுக்கு கொழும்பு டொரின்டன் மைதானத்திலும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.  

அத்துடன், குறித்த பயிற்சிகளுக்கு மேலதிகமாக அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட விசேட மெய்வல்லுனர் குழாத்தில் (Elite Pool) கடந்த வருட இறுதியில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கம் வென்ற வீரர்களுடன் விதூஷா லக்ஷானி, நதிஷா ராமநாயக்க மற்றும் விபத்துக்குள்ளாகிய நிமாலி லியானஆரச்சி உள்ளிட்ட வீராங்கனை உள்ளடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

>> கரப்பந்து விளையாட்டில் கொரோனா தொற்று அதிகம்

இதுஇவ்வாறிருக்க, 2021 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு தயாராகும் நோக்கில் இலங்கை வீரர்களுக்கு எந்தவொரு போட்டித் தொடரும் இல்லை என்பதை இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் வை.கே குலரத்ன, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் அவதானத்துக்கு கொண்டு வந்துள்ளார்.  

மேலும், இதற்கு பொருத்தமான ஒரு தொடராக இவ்வருட இறுதியில் தேசிய ரீதியில் மெய்வல்லுனர் தொடரொன்றை நடத்தும்படி சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு சம்மேளனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் பாலித்த பெர்னாண்டோ சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த தொடரை நடத்துவதற்கான எந்தவொரு திகதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை

>> பெண் குழந்தைக்குத் தந்தையானார் உசைன் போல்ட்

ஆனாலும், எதிர்வரும் செப்டம்பரில் குறித்த மெய்வல்லுனர் தொடர் நடைபெறலாம் என மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதேவேளை, மெய்வல்லுனர் வீரர்களுக்கான பயிற்சிகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான அனைத்து வேலைத்திட்டங்களையும் இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் பூர்த்தி செய்துள்ள நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<