சங்கக்காரவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய மிக்கி ஆத்தர்

182
Mickey Arthur

தனது பிறந்த நாளை இலங்கையின் முன்னாள் அணித் தலைவரான குமார் சங்கக்காரவின் காலியில் உள்ள இல்லத்தில் கொண்டாடியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆத்தர் தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக மிக்கி ஆத்தர், கொழும்பில் உள்ள தாஜ் சமுத்ரா ஹோட்டலில் தங்கியிருந்து இலங்கை வீரர்களுக்கு இணையத்தளம் வாயிலாக பயிற்சிகளை வழங்கினார்.

இந்த நிலையில், கடந்த 11ஆம் திகதி முதல் இலங்கையில் ஊரடங்கு அமுல் தளர்த்தப்பட்ட நிலையில், மிக்கி ஆத்தரும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டுள்ளார்.

>> இலங்கை வீரர்கள் எப்படிப்பட்டவர்கள்? – மிக்கி ஆத்தர்

இதனிடையே, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) தனது 52ஆவது பிறந்த நாளை மிக்கி ஆத்தர் கொண்டாடியிருந்தார்.

இந்த நிலையில், க்ரிக் இன்போ ஊடகத்திற்கு மிக்கி ஆத்தர் வழங்கிய பேட்டியில்

எட்டு வாரங்களாக லொக்டவுன் காரணமாக தாஜ் சமுத்ராவில் முடங்கிக் கிடந்தேன். எட்டு வாரங்கள் ஹோட்டலை விட்டு வெளியே வந்த போது சிறையில் இருந்து விடுதலையாகி வந்ததைப் போல உணர்ந்தேன்.

அத்துடன், இலங்கையில் லொக்டவுன் தளர்த்தப்பட்டதால் குமார் சங்கக்காரவுடன் கடந்த வெள்ளிக்கிழமை காலிக்குச் சென்றதுடன், அங்குள்ள அவரது இல்லத்தில் வைத்து எனது பிறந்த நாளைக் கொண்டினேன். என்னுடன் துடுப்பாட்ட பயிற்சியாளர் கிரேன்ட் ப்ளெவர் வந்திருந்தார்

மேலும், பிறந்த நாளைக் கொண்டாடிய போது அங்கிருந்தவர்கள் தனக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்க வந்தததாகத் தெரிவித்த அவர், அதன் பிறகு அப்படி செய்திருக்கக் கூடாது என அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை, தாஜ் சமுத்ராவில் இருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர்,

தாஜ் சமுத்ராவில் அவ்வப்போது 750 மீற்றர் சுற்றுப் பாதையில் நடைப் பயிற்சியில் ஈடுபடுவேன். ஒருநாள் பாம்பொன்றையும், உடும்பொன்றையும் கண்டபிறகு நடைப் பயிற்சி செய்வதை நிறுத்திக் கொண்டேன் என கூறினார்

இதுஇவ்வாறிருக்க, தனது குடும்பத்தாரைப் பிரிந்து கடந்த இரண்டு மாதங்களாக இருப்பது குறித்து கருத்து வெளியிட்ட மிக்கி ஆத்தர்

வாழ்க்கை என்பது நான் நினைத்ததை விட நிறைய மாறிவிட்டது. கொரோனா காரணமாக நண்பர்களுடன் பியர் குடிக்க முடியவில்லை. விமானத்தில் சென்று எனது குடும்பத்தாரைப் பார்க்க முடியாமல் உள்ளது

எனது மூத்த மகள் தென்னாபிரிக்காவில் உள்ளார். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். அடுத்த இரண்டு மகள்மாரும் பேர்த்தில் உள்ளனர். நான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தாத்தாவாகப் போகிறேன். எவ்வாறு எனது பேத்தியை பார்க்க முடியும் என யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<