கிட்டத்தட்ட 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவழித்து ஹோமாகமவில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில், இலங்கை கிரிக்கெட் சபையானது பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்கின்றது.
ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட்
இந்நிலையில், இந்த மைதானத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான ரொஷான் மஹநாம, மஹேல ஜயவர்தன ஆகியோர், இலங்கை கிரிக்கெட் சபைக்கு தற்போது புதிய மைதானம் ஒன்று தேவையில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னர், இலங்கை கிரிக்கெட் சபை உலகக் கிண்ணம் போன்ற ஐ.சி.சி. இன் எதிர்காலத் தொடர்களை நடாத்தும் வாய்ப்பினை பெறுவதற்கு, 40,000 பார்வையாளர்கள் வரை உள்ளடக்கூடிய கிரிக்கெட் மைதானங்களை வைத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தது.
”நான் உலகின் பல இடங்களிலும் நடந்த உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு மத்தியஸ்தராக இருந்திருக்கின்றேன். நியூசிலாந்தில் ஒரேயொரு மைதானம் மாத்திரமே 40,000 பார்வையாளர்களை உள்ளடக்கும் வகையில் இருக்கின்றது. தென்னாபிரிக்கா, இங்கிலாந்து போன்ற வேறு இடங்கள் உலகக் கிண்ணப் போட்டிகள் விளையாடப்பட்ட சிறிய மைதானங்களினை கொண்டிருக்கின்றன. உலகக் கிண்ணம் ஒன்றை நடாத்துவதற்கான வாய்ப்பினை பெறுவதற்கு நாம் தேவைக்கு மேலதிகமான வசதிகளை கொண்டிருக்கின்றோம் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.” என ஐ.சி.சி. இன் முன்னாள் போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட ரொஷான் மஹநாம The Island செய்திச் சேவையிடம் தெரிவித்திருந்தார்.
”உண்மையாக நாங்கள் கடனொன்றைப் பெற்று, மைதானம் ஒன்றை நிர்மாணிப்பது பொருத்தமில்லாத விடயமாகும். இன்னும் நாங்கள், ஹம்பாந்தோட்டை மைதானத்தினை நிர்மாணிக்க வாங்கிய கடனையே திரும்ப அடைக்கவில்லை. எங்களிடம் சில மேம்பட்ட வசதிகள் காணப்படுகின்றன. எமது கவனம் இந்த வசதிகளை மேம்படுத்துவதிலேயே இருக்க வேண்டும்.”
”இப்போதைக்கு, (கிரிக்கெட்) விளையாட்டுடன் நேரடியாகத் தொடர்புட்ட, தொடர்புபடாத மக்கள் நிறையப்பேர் கொவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கை கிரிக்கெட் சபையானது இந்த தருணத்தில் வேறு செயற்திட்டங்களில் களமிறங்காது, இந்த மக்களுக்கு என்ன தேவையாக இருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும்.” என்றும் மஹநாம குறிப்பிட்டார்.
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றைய முன்னாள் தலைவர்களில் ஒருவரான மஹேல ஜயவர்தன தனது டுவிட்டர் கணக்கில் இலங்கையானது இப்போது இருக்கும் வசதிகளைக் கொண்டே ஏற்கனவே இரண்டு உலகக் கிண்ணத் தொடர்களை நடாத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட மஹேல, “உலகக் கிண்ணத்தினை நடாத்தும் வாய்ப்பு ஒன்றை பெற்ற பின்னர் ஐ.சி.சி. இடம் நிதியுதவி பெற்று மைதானங்களை நிர்மாணிப்பது தொடர்பில் (நாம்) யோசிக்க வேண்டும்” எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கையின் பெரிய கிரிக்கெட் மைதானம் ஹோமாகமவில்
அதேநேரம், இலங்கை கிரிக்கெட் சபையானது நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் நிலத்தின் விலை அதிகரிக்கும் காரணத்தினால் மைதானம் ஒன்றை அமைக்க இப்போதே முதலீடு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கின்றது.
இதோடு, (மைதானம் அமைக்கப்படவுள்ள) குறித்த நகரத்திற்கு அருகாமையில் இலங்கை கிரிக்கெட் சபைக்கு சொந்தமான இடங்களில் கிரிக்கெட் மைதானம் ஒன்றுக்கு தேவையாக இருக்கும் அனைத்து வசதிகளையும் அமைக்க உத்தேசித்துள்ளதாகவும் (இலங்கை கிரிக்கெட் சபையின்) அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் சபையின் பயிற்சிக் கூடாரங்கள் அமைந்திருக்கும் ஆர். பிரேமதாச மைதானம் சுகததாஸ விளையாட்டுத் தொகுதியிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்டிருப்பதோடு, இலங்கை கிரிக்கெட் சபையின் காரியாலயம் அமைந்திருக்கும் இடம் SSC (Sinhalese Sports Club) இற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி மூலம் – The Island
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<