கொரோனாவின் பின் கால்பந்து போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

176

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் ஐரோப்பாவின் முதலாவது பிரதான கால்பந்து போட்டியாக ஜெர்மனியின் புன்டஸ்லிகா தொடர் கடந்த சனிக்கிழமை (16) ஆரம்பமானது. எதிர்வரும் காலங்களில் மீண்டும் ஆரம்பமாகவிருக்கும் ப்ரீமியர் லீக் மற்றும் ஏனைய பிரதான லீக் போட்டிகள் எவ்வாறு அமையப்போகிறது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் இந்தத் தொடர் உள்ளது. 

மீண்டும் துளிர்விடும் கால்பந்து!

பெலாரஸ் மற்றும் நிக்கரகுவா போன்ற சிறு லீக் தொடர்கள் தடைப்படாமல் நடைபெற்றபோதும், கடந்த வார இறுதியில் ஆரம்பமான தென் கொரியாவின் K லீக் தொடரே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலான காலத்தில் நடைபெறும் முதலாவது பிரதான கால்பந்து லீக்காக பார்க்கப்படுகிறது.   

எனவே மூடப்பட்ட அரங்கில், சில சமூக இடைவெளிகளை பின்பற்றிய எதிர்வரும் கால்பந்து போட்டிகள் எவ்வாறு அமையும் என்பதை பார்ப்போம்

அரங்கிற்குள் நுழைய கட்டுப்பாடு

போட்டிக்காக வரும் அணிகள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் பல பஸ் வண்டிகளில் அழைத்து வரப்படுகின்றனர்

வீரர்கள் மற்றும் பணியாளர்கள் அணியின் ஹோட்டல்களில் வாரம் முழுவதும் தனிமைப்படுத்தப்படுவதோடு அவர்களிடம் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்தப்படுகிறது.  

பஸ் வண்டிகளில் அவர்கள் வெளியேறியதும் மைதானத்தை நோக்கி முகக் கவசங்களை அணிந்தே பயணிக்கின்றனர்

ஊடகம் உட்பட போட்டியில் தொடர்புபட்ட ஏனையவர்களின் உடல் வெப்பநிலை சோதிக்கப்படுகின்றது.   

போட்டிகளை நேரடியாக பார்வையிட ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, அங்கு எவரும் ஒன்றுகூடாமல் இருப்பதற்கு மைதானத்தை சுற்றி பொலிஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர். அரங்கிற்குள் 213 பேர் மாத்திரமே அனுமதிக்கப்படுவதோடு 98 பேர் மைதானம் மற்றும் அதனைச் சூழ இருப்பதற்கு (வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பந்தை எடுத்துக் கொடுப்பவர்கள் போன்றவர்கள்அனுமதிக்கப்படுகின்றனர். பாதுகாவலர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவர்களே ஏனைய 115 பங்கேற்பாளர்களாவர்.

பாதுகாப்பு பிரிவினர் மற்றும் வீடியோ நடுவர் தொழில்நுட்பத்தை இயக்குபவர்கள் உட்பட மேலும் 109 பேர் அரங்கிற்கு வெளியில் இருக்க அனுமதிக்கப்படுகின்றனர்.   

போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரும் பாதி நேரத்திலும் பந்தை பிடித்துக் கொடுப்பதற்கு மைதானத்தில் இருப்பவர்கள் பந்துகளை கிருமி தொற்றி நீக்கி மூலம் சுத்தம் செய்வார்கள்.  

சமூக இடைவெளி 

போட்டியின்போது பதில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் முகக் கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை பின்பற்றி மைதானத்திற்கு வெளியில் வைக்கப்பட்டிருக்கும் இருக்கைகளில் அல்லது அரங்கில் காலியாக இருக்கும் இருக்கையில் இருப்பார்கள்

சனிக்கிழமை நடந்த பிரைபேர்க் அணிக்கு எதிரான போட்டியை 1-1 என்று சமன் செய்த RB லிப்சிக் அணி அரங்கில் விமானத்தின் படிக்கட்டுகளை பயன்படுத்தி இருந்தது. இதன்மூலம் அரங்கில் அமர்ந்திருக்கும் வீரர்களுக்கு மைதானத்திற்கு செல்ல வசதியாக இருந்தது

வீரர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு வசதியாக தலைமை பயிற்சியாளர் முகக் கவசம் இல்லாமல் இருப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது

பதில் வீரர்கள் தயாராகும் உடற் பயிற்சியின்போது முகக் கவசங்களை நீக்கி இருந்ததோடு ஆடும் வீரர் மாற்றப்படும்போது அவர் இருக்கைக்கு செல்லும் முன்னர் முகக் கவசம் அளிக்கப்படுகிறது.   

FFSL மூலம் தேசிய கொவிட் 19 நிதிக்கு இரண்டு மில்லியன் நன்கொடை

முழங்கைகளை முட்டி கொண்டாட்டம்

சனிக்கிழமை நடைபெற்ற ஆறு போட்டிகளிலும் மொத்தம் 16 கோல்கள் பெறப்பட்டதோடு போட்டியின்போது வீரர்களிடையே பந்தை Tackle செய்வது மற்றும் பெனால்டிகளில் எந்த மாற்றமும் இருக்கவில்லை

எனினும் கோல் பெற்ற பின்னர் வீரர்களிடையே இடம்பெற்ற கொண்டாட்டத்தில் சில சமூக இடைவெளிகள் பின்பற்றப்பட்டன. இதன்போது வீரர்கள் கட்டித்தழுவிக்கொள்வதற்கு பதில் முழங்கைகளை முட்டி தமது கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.   

எனினும் சில கோல்களின்போது குறிப்பாக ஹெர்தா பெர்லின் வீரர்கள் ஹொப்பென்ஹெய்ம் அணிக்கு எதிராக பெற்ற மூன்று கோள்களின்போதும் அவர்கள் வழக்கமான பாணியில் கட்டித்தழுவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இருக்கைகளில் ஒரு சில டஜன் பேரே சத்தம் எழுப்பிய நிலையில் தொலைக்காட்சியில் பார்ப்பவர்களுக்கு வீரர்கள் மற்றும் முகாமையாளர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெளிவாக கேட்க முடிந்தது. அதேபோன்று பந்தை உதைப்பது மற்றும் அது கோல் கம்பத்திற்கு பின்னால் விழுவது போன்ற சத்தங்களையும் கேட்க முடிந்தது.   

போட்டியின்போது ஐந்து பதில் வீரர்களை பயன்படுத்துவதற்கு அணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வசதிக்கான வாய்ப்பு ஏனைய லீக் போட்டிகள் ஆரம்பிக்கும்போது அவைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே புருசியா டொர்ட்முண்டிடம் 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஸ்கெல்கே அணி முதல் பாதியில் இரண்டு பதில் வீரர்களை பயன்படுத்தியதோடு இடைவெளிக்குப் பின்னர் மேலும் மூன்று பதில் வீரர்களை பயன்படுத்தியது.  

மெஸ்ஸியை விட மரடோனா சிறந்த வீரரா? – கென்னவரோ

வெற்று அரங்கில் கரகோசம்

போட்டியின் இறுதி விசில் ஊதப்பட்ட பின்னர் டோர்ட்முண்ட் வீரர்கள் வெறிச்சொடிய அரங்கிற்கு முன் வழக்கமான பாணியில் கொண்டாட்டம் நடத்தினர். கடந்த காலங்களில் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரங்கில் நிரம்பி வழியும் அந்த அணியின் ரசிகர்கள் மஞ்சள் அட்டையை உயர்த்திப் பிடித்து கொண்டாட்டத்தில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கதாகும்.  

அக்ஸ்பேர்க் அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய வொல்பேர்க் வீரர்கள் நடுவர் மற்றும்  உதவி நடவர்களுக்கு கைலாகு கொடுப்பதற்கு பதில் பாதணிகளை முட்டி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர்.

வேறு போட்டிகளில் முஷ்டியால் அல்லது முழங்கையால் முட்டி கொண்டாட்டம் மற்றும் வாழ்த்தை தெரிவித்துக்கொண்டதை பார்க்க முடிந்தது

போட்டியின்போது சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் வீரர்கள் மற்றும் முகாமையாளர்களிடம் நீண்ட தடியில் ஒலிவாங்கியை நீட்டியே தொலைக்காட்சி செய்தியாளர்கள் பேட்டி கண்டனர். போட்டிக்கு பின்னரான செய்தியாளர் மாநாடும் வீடியோ கொன்பிரன்ஸ் முறையிலேயே நடத்தப்பட்டது

ஸ்கெல்கே அணியை இலகுவாக வீழ்த்தியதன் மூலம் டோர்ட்முண்ட், புன்டஸ்லிகா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பயேர்ன் முனிச்சை விடவும் ஒரு புள்ளி இடைவெளியுடன் இரண்டாவது இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.    

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<