இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை புரிந்து தங்களுக்கு என ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்த அடிப்படையில், இலங்கை அணியின் போட்டி வெற்றிகளும் மிகவும் தனித்துவமான ரீதியில் பெறப்பட்டிருக்கின்றன. சர்வதேச ரீதியில் இலங்கை அணி பல்வேறு வெற்றிகளை பெற்றிருந்தாலும், ஒருசில வெற்றிகள் இன்றுவரையும் ஞாபகத்தில் இருக்கக்கூடியவை.
சாதனை இணைப்பாட்டங்களின் ஜாம்பவான் மஹேல
இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் ஆடி 537 ஓட்டங்களிற்கு…
டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I போட்டிகள் என அனைத்துவிதமான போட்டிகளிலும், மறக்கமுடியாத வெற்றிகளை இலங்கை அணி தங்களுடைய ரசிகர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளது. அவ்வாறான வெற்றிகளுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி பெற்றுக்கொடுத்துள்ள என்றும் மறக்க முடியாத டெஸ்ட் வெற்றிகள் இதோ…
இலங்கை எதிர் இந்தியா 1985 (கொழும்பு)
சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் அந்தஸ்தை பெற்ற மூன்றாவது வருடத்தில் இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் வைத்து, இந்திய அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவுசெய்தது.
தங்களுடைய கன்னி டெஸ்ட் வெற்றியினை பெறுவதற்கு இலங்கை அணி 14 டெஸ்ட் போட்டிகளை மாத்திரமே எடுத்துக்கொண்டது. இலங்கை அணியின் விக்கெட் காப்பு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அமல் டி சில்வா முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததுடன், 9 ஆட்டமிழப்புகளையும் பெற்று இப்போட்டியின் நட்சத்திர வீரராக மாறியிருந்தார்.
இவரின் பிரகாசிப்பு மாத்திரமின்றி, ரோய் டயஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரைச் சதம் கடந்ததுடன், ருமேஷ் ரத்நாயக்க மிகச்சிறந்த வேகப் பந்துவீச்சாளர் என்பதை நிரூபித்து, போட்டியில் 09 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்திய அணியின் சார்பாக சுனில் கவாஸ்கர், க்ரிஸ் ஸ்ரீகாந் மற்றும் மொஹிந்தர் அமர்னாத் ஆகியோர் அரைச் சதம் கடந்தும், அணியால் 244 ஓட்டங்களை பெற முடிந்ததுடன், இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 385 ஓட்டங்களை பெற்று முன்னிலைப் பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ரோய் டயஸின் அரைச் சதத்துடன், இலங்கை அணி 206 ஓட்டங்களை குவித்து இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டதுடன், இந்திய அணி 198 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணி தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்தது.
இலங்கை எதிர் நியூசிலாந்து 1995 (நபீர்)
உலகக் கிண்ணத் தொடரை வெற்றிக்கொள்வதற்கு ஒரு வருடம் மாத்திரமே இருக்க, நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது இலங்கை. புற்கள் நிறைந்த கடினமான ஆடுகளம் வழங்கப்பட்டிருக்க, 21 வயதான இளம் சமிந்த வாஸின் சகலதுறை பிரகாசிப்பின் மூலம் இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் முதல் டெஸ்ட் வெற்றியினை பதிவுசெய்தது.
போட்டியின் நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு அணி மாத்திரமே 200 என்ற ஓட்ட எண்ணிக்கையை கடந்திருந்தது. சமிந்த வாஸ் 10 விக்கெட் குவிப்பொன்றினை கைப்பற்றி, அணிக்கு பந்துவீச்சில் பிரகாசித்திருந்தமை மாத்திரமின்றி, துடுப்பாட்டாத்தில் இரு இன்னிங்ஸ்களிலும், 33* மற்றும் 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
அத்துடன், இலங்கை அணியின் மறக்கப்பட்ட விக்கெட் காப்பாளர் சாமர துனுசிங்க போட்டியில் அதிகபட்சமாக 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், 7 பிடியெடுப்புகளையும் நிகழ்த்தியிருந்தார். இதன்படி, 241 என்ற மாபெரும் ஓட்ட வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றியை பெற்றுக்காண்டது.
இலங்கை எதிர் இங்கிலாந்து 1998 (தி ஓவல்)
இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு சிறப்பம்சம் மிக்க வெற்றியாக இங்கிலாந்துக்கு எதிராக 1998ம் ஆண்டு பெறப்பட்ட வெற்றி அமைந்திருந்தது. இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவை வீழ்த்தி, ஆஷஷ் தொடருக்காக காத்திருந்தது.
சங்கக்காரவின் தலைமைப் பதவியை நீடிக்கவுள்ள MCC
கிரிக்கெட்டின் சட்டவிதிகளை உருவாக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட்..
குறித்த தொடருக்கு முன்னர் நடப்பு உலகக் கிண்ண சம்பியனான இலங்கை அணியை இங்கிலாந்து எதிர்கொண்டது. இலங்கை அணி உலகக் கிண்ணத்தை வென்றிருந்த போதும், டெஸ்ட் போட்டிகளில் அவ்வளவு கடினமான அணியாக இருக்கவில்லை.
போட்டியில் ஆரம்பத்தில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முத்தையா முரளிதரன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த போதும், கிரேம் ஹிக் மற்றும் ஜோன் க்ரெவ்ளி ஆகியோரின் சதத்தின் உதவியுடன் 445 ஓட்டங்களை குவித்தது.
ஆனால், இதற்கு பதிலளித்த இலங்கை அணியின் உலகக் கிண்ண நட்சத்திரங்களான சனத் ஜயசூரிய 213 ஓட்டங்களையும், அரவிந்த டி சில்வா 152 ஓட்டங்களையும் குவிக்க, இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் பின்னடைவை சந்தித்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் முத்தையா முரளிதரன் 9 விக்கெட்டுகளை கைப்பற்ற, இங்கிலாந்து அணி 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. பின்னர், இலங்கை அணிக்கு 36 ஓட்டங்கள் தேவைப்பட, அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிக்கொண்டது. இந்த வெற்றியானது இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் வைத்து, இங்கிலாந்து அணியை டெஸ்ட் போட்டியொன்றில் வீழ்த்திய முதல் சந்தர்ப்பமாகவும் அமைந்தது.
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா 2006 (கொழும்பு)
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் மஹேல ஜயவர்தன தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 374 ஓட்டங்களை பெற்றிருந்த வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் இன்னிங்ஸ் நிறைவடைந்த ஒரு வாரத்தில் மற்றுமொரு சிறந்த இன்னிங்ஸையும் அவர் ஆடியிருந்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அப்போதிருந்த 6வது அதிகமான வெற்றியிலக்கான 352 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றிருந்தது. இரண்டு அணிகளும் 4 இன்னிங்ஸ்களிலும் 300 ஓட்டங்களை கடந்திருந்தன.
எனினும், மஹேல ஜயவர்தன ஆட்டமிழக்க, இலங்கை அணிக்கு 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. இந்த ஓட்ட எண்ணிக்கைக்கு பர்வீஸ் மஹ்ரூப் சற்று நிலைத்தாட, சமிந்த வாஸ் மற்றும் முத்தையா முரளிதரன் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இறுதியில் மாலிங்க கைகொடுக்க, பர்விஸ் மஹ்ரூப் இலங்கை அணிக்கு ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா 2011 (டேர்பன்)
இலங்கை அணியானது தென்னாபிரிக்காவுக்கு 2011ம் ஆண்டுக்கு முன்னர் மேற்கொண்ட 3 தொடர்களில் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது. இதில், மூன்று போட்டிகள் இன்னிங்ஸ் தோல்வியாக அமைந்தது.
ஆஸி. அணியை வாயடைக்க வைத்த மாலிங்க, மெதிவ்ஸ்
இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட்டில் பல வரலாற்று வெற்றிகளை..
அத்துடன், துணைக்கண்டங்களில் பெறப்பட்ட 8 வெற்றிகளிலும் பங்கேற்றிருந்த முத்தையா முரளிதரன், 2010ம் ஆண்டு ஓய்வினை அறிவித்திருந்தார். எனவே, போட்டியின் 20 விக்கெட்டுகளையும் இலங்கை அணியால் கைப்பற்ற முடியுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது.
குறித்த தொடரின் முதல் போட்டியில், வெர்னன் பில்லெண்டரின் 10 விக்கெட் குவிப்பால் இலங்கை அணி தோல்வியடைந்தது. டேர்பனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 162 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்தப் போட்டியிலும் இலங்கை அணிக்கு ஏமாற்றம் அடையுமா? என்ற நிலையில், திலான் சமரவீர, அறிமுக வீரர் தினேஷ் சந்திமாலுடன் இணைந்து 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றதுடன், தன்னுடைய சதத்தையும் பதிவுசெய்தார்.
இலங்கை அணி 300 ஓட்டங்களை கடந்த நிலையில், பின்னர் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு சானக வெலகெதரவின் அபார பந்துவீச்சின் மூலம் நெருக்கடி கொடுக்க, அந்த அணி 168 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இரண்டாவது இன்னிங்ஸில் குமார் சங்கக்கார 108 ஓட்டங்களையும், அறிமுக வீரர் தினேஷ் சந்திமால் அரைச்சதமும் கடக்க, தென்னாபிரிக்க அணிக்கு 450 என்ற வெற்றியிலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி வாய்ப்பினை நழுவவிட நினைக்கவில்லை. ரங்கன ஹேரத் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்த, இலங்கை அணி 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
தென்னாபிரிக்க மண்ணில் இலங்கை அணி பெற்ற முதல் டெஸ்ட் வெற்றியாகவும், இந்த வெற்றி பதிவாகியது.
இந்திய வீரர்களுக்கு பயிற்றுவிக்க தயார் என்கிறார் சொஹைப் அக்தார்
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்றுவிப்பாளராக செயற்படும்..
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா 2019 (டேர்பன்)
இலங்கை அணிக்கு டேர்பன் மைதானம் ராசியான மைதானம் என்ற எண்ணம் இருந்த போதும், இம்முறை புதிய அணித் தலைவரான திமுத் கருணாரத்னவின் கீழ் இலங்கை அணி களமிறங்கியது.
தொடர்ச்சியான தோல்விகளால் சற்று நெருக்கடியில் இருந்த இலங்கை அணி, திமுத் கருணாரத்ன தலைமையில் டெஸ்ட் தொடரை வென்று, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடர் வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற்றது.
டேர்பனில் நடைபெற்ற முதல் போட்டியில், விஷ்வ பெர்னாண்டோ மற்றும் கசுன் ராஜித ஆகியோரின் ஸ்விங் பந்துவீச்சின் மூலம், 235 ஓட்டங்களுக்கு தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்டுகளையும் இழந்தது. எனினும், மீண்டும் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தென்னாபிரிக்காவின் வேகத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
மீண்டும் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்று, இலங்கை அணிக்கு 304 என்ற பாரிய இலக்கினை நிர்ணயித்தது. இலங்கை அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய நிலையில், 110 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.
பந்தை மிளிர வைக்க புதிய பதார்த்தம்
அவுஸ்திரேலியாவினை மையமாகக் கொண்டு இயங்கும் கூகபுர்ரா (Kookaburra) நிறுவனம்..
எனினும், குசல் பெரேரா சிறப்பாக ஆடி, தனன்ஜய டி சில்வாவுடன் 96 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றார். தனன்ஜய டி சில்வாவினைத் தொடர்ந்து அடுத்து வருகைத்தந்த வீரர்கள் தொடர்ச்சியாக வெளியேற இலங்கை அணி 226 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்தது.
இறுதி விக்கெட்டுக்காக 78 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், அபாரமாக ஆடிய குசல் பெரேரா 153 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் விளாசி அணிக்கு த்ரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். இதில் முக்கிய பங்கு வகிக்கும் விஷ்வ பெர்னாண்டோ இறுதிவரை விக்கெட்டினை விட்டுக்கொடுக்காமல் களத்தில் நின்றார்.
தென்னாபிரிக்கா போன்ற வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு பெறப்பட்ட இந்த வெற்றி, மிகச்சிறந்த டெஸ்ட் வெற்றிகளில் ஒன்றாக பதிவாகியதுடன், குசல் பெரேராவின் இன்னிங்ஸ் மிகச்சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸாகவும் பாராட்டப்பட்டது.
இவற்றில் இலங்கை அணி பெற்ற சிறந்த வெற்றி என நீங்கள் எந்தப் போட்டியை நினைக்கின்றீர்கள்? உங்கள் பதிலை கீழே பதிவிடுங்கள்
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<