சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை எதிர்வரும் ஜூலை மாத மத்திய பகுதியில் நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் நடைபெறவிருந்தது. எனினும், கொவிட்-19 காரணமாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதிவரை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கிரிக்கெட் புத்துயிர் பெற சங்கக்காரவின் அறிவுரை
பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில்…
அதன் காரணமாக, எதிர்வரும் ஜூலை மாத மத்திய பகுதியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான தொடரை நடத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை இரு கிரிக்கெட் சபைகளும் மேற்கொண்டு வருகின்றன.
அதன்படி, குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று, அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அத்துடன், எத்தனை நாட்கள் வீரர்களை தனிமைப்படுத்துவது என்ற பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்று வருகின்றது.
கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக வீரர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களை தனிமைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அதேநேரம், மேற்கிந்திய தீவுகள் அணியின், இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணம் உறுதிசெய்யப்படும் பட்சத்தில், பயிற்சிகளை மேற்கொள்வதற்கு, முழுமையாக மூடப்பட்ட மைதானங்கள் பயிற்சிக்காக வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறு படைத்த துடுப்பு மட்டையை ஏலம் விடும் ஹேர்ஷல் கிப்ஸ்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி …
மேற்கிந்திய தீவுகள் அணியின் இங்கிலாந்துக்கான சுற்றுப் பயணத்துக்கான போட்டி அட்டவணை தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடிவடைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த பருவகாலத்துக்கான போட்டிகள் ரசிகர்கள் இன்றி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் தொடரின் பின்னர், இந்த பருவகாலத்தில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளும் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளன.
எவ்வாறாயினும், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், அரசாங்கம் வெளியிட்டுள்ள சட்ட நிபந்தனைகளுக்கு அமைய நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க <<