இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் ஜனவரியிலா?

135

கொரோனா வைரஸ் காரணமாக பிற்போடப்பட்ட இலங்கை – இங்கிலாந்து  அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை அடுத்த வருடம் ஜனவரியில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் (SLC) நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்திருக்கின்றார். 

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நடைபெறுமா?

இலங்கைக்கு ஜூலை மாதத்தின் கடைசிப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்…

இந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை வீரர்களுடன் ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த டெஸ்ட் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக இரத்துச் செய்யப்பட்டதுடன், இலங்கை வந்த ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியும் உடனடியாக தமது தாயகம் திரும்பியிருந்தது.

காலி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் நடைபெறவிருந்த இந்த டெஸ்ட் தொடர் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) இதுவரை எந்த தீர்மானங்களையும் அறிவிக்காத நிலையில் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியான ஏஷ்லி டி சில்வாவின் கருத்து வெளியாகியிருக்கின்றது.

“இங்கிலாந்து தொடரானது அடுத்த ஆண்டின் ஜனவரியில் மீள நடாத்த ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், (டெஸ்ட் தொடரின்) திகதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.”

ஐ.சி.சி. இன் எதிர்கால போட்டி அட்டவணைக்கு (FTP) அமைய இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. ஆனால், தற்போது பிற்போடப்பட்டுள்ள இங்கிலாந்து – இலங்கை அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் ஜனவரியில் நடைபெற்றால் இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் அடுத்த ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒரு பக்கமிருக்க இலங்கை கிரிக்கெட் அணி ஜூன் மாதம் தென்னாபிரிக்க வீரர்களுடன் விளையாடவிருந்த மூன்று ஒருநாள், மூன்று T20 போட்டிகள் கொண்ட தொடர்களும் கொரோனா வைரஸ் காரணமாக இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இவ்வாறு கொரோனா வைரஸினால் தடைப்பட்ட ஏனைய கிரிக்கெட் தொடர்களையும் மீள ஒழுங்கு செய்வதற்கான முயற்சிகளில் இலங்கை கிரிக்கெட் சபை ஈடுபட்டு வருவதாக ஏஷ்லி டி சில்வா குறிப்பிட்டிருக்கின்றார்.

”இதேநேரம், நாம் ஏற்கனவே தடைப்பட்ட கிரிக்கெட் தொடர்களை மீள நடாத்துவதற்கான சாத்தியப்பாடுகளையும், அதற்கான கால இடைவெளிகள் குறித்தும் ஆலோசனை செய்கின்றோம். தற்போது நாம் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரினை மீள் ஒழுங்கு செய்வதற்கான முயற்சிகளில் இறங்கி இருக்கின்றோம். நாம், இதற்காக (ஐ.சி.சி. இன்) அங்கத்துவம் பெற்ற ஏனைய நாடுகளுடனும் கலந்துரையாடி விடயங்களை எவ்வாறு திட்டமிடுவது என்பது பற்றியும் ஆராய்ந்துவருகின்றோம்.” 

டெஸ்ட் தரவரிசையில் இலங்கை அணி முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளுக்காக வெளியிட்டிருக்கும்..

இதேநேரம் ஏஷ்லி டி சில்வா, இலங்கை வீரர்கள் இலங்கை மண்ணில் வைத்து எதிர்வரும் ஜூன், ஜூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடர்கள் திட்டமிட்டபடி நடைபெற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

”ஜூன்-ஜூலை மாதங்களில் இந்திய அணிக்கு எதிரான தொடரும், ஜூலை-ஒகஸ்ட் மாதங்களில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரும் திட்டமிட்டபடி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாம் இன்னும் ஓரிரு வாரங்களில் இந்த கிரிக்கெட் தொடர்கள் விளையாடப்படுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆராயவிருக்கின்றோம்.” என்றார். 

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<