இலங்கைக்கு ஜூலை மாதத்தின் கடைசிப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, ஐ.சி.சி. இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பிற்காக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையுடன் விளையாடவுள்ளது.
தனது ஜெர்சி, துடுப்பு மட்டையை ஏலத்தில் விடும் அசார் அலி
கொவிட்-19 வைரஸிற்கு எதிராக உதவும்….
எனினும், தற்போது உலகிற்கு பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல கிரிக்கெட் தொடர்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவதில் சந்தேகம் நிலவி வருகின்றது. ஆனால், இந்த டெஸ்ட் தொடரினை பிற்போடுவது தொடர்பில் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி நிஷாமுத்தின் சௌத்ரி தெரிவித்துள்ளார்.
”நான் நேற்றும் இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டேன். நாங்கள் இந்த சுற்றுப்பயணம் தொடர்பில் கதைக்கின்றோம். ஆனால், இதுவரையில் (தொடர் பிற்போடுவது பற்றி) எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை.” என சௌத்ரி கருத்து தெரிவித்தார்.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, மார்ச் மாதம் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவிருந்த ஒரு நாள், டெஸ்ட் தொடர்களை இரத்துச் செய்ததோடு, அயர்லாந்து அணியுடன் மே மாதம் விளையாடவிருந்த மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரினையும் பிற்போட்டிருந்தது. இன்னும், பங்களாதேஷ் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடவிருந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே நடைபெற இருந்த தொடர்களை இரத்துச் செய்ததினால், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இரத்துச் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இலங்கை கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் தெற்காசிய நாடுகள் அனைத்தை விடவும் வினைத்திறனாக செயற்படுவதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரினை நடாத்தும் முனைப்பில் கலந்துரையாடல்கள் நடைபெறுவதாக அறியக்கிடைக்கின்றது.
அதேநேரம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது தொடர்பில் தமது நாட்டு அரசாங்கத்தின் ஆலோசனையினையும் கவனத்திற் கொள்ளவிருப்பதாக நிசாமுத்தின் சௌத்ரி தெரிவித்திருந்தார்.
”நீங்கள் ஒரு விடயத்தினை கவனத்தில் வைக்க வேண்டும். அதுதான், வெளிநாட்டுப்பயணம் ஒன்று தொடர்பான அரசாங்க அறிவுறுத்தல். இவை மிகவும் முக்கியமானவை. மற்றைய நாடு (இலங்கை) நன்றாக இருந்தால் அது மாத்திரம் போதுமாக இருக்காது. எங்களது அரசாங்கத்தின் அறிவுறுத்தலும் முக்கியமானது.”
”நாம் அவர்களின் நாட்டு (இலங்கை) அரசாங்கம் நிலைமைகளை தற்போது எப்படி கையாள்கின்றது என அவதானிக்கின்றோம். அதேநேரம், எங்களது நாட்டு அரசாங்கம் என்ன சொல்கின்றது என்பதையும் கவனிக்கின்றோம். ஏனெனில், இவை அனைத்தினையும் நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது.”
இன்னும் கருத்து வெளியிட்ட நிசாமுத்தின் சௌத்ரி இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் பற்றி சரியான முடிவு ஒன்றை எடுக்க இன்னும் எட்டு அல்லது பத்து நாட்கள் தேவையாக இருக்கின்றது எனத் தெரிவித்தார்.
ஆஸி. அணியை வாயடைக்க வைத்த மாலிங்க, மெதிவ்ஸ்
இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச……
”தற்போது கொரோனா வைரஸ் தொற்று எமது நாட்டில் உயர்ந்த அளவில் இருக்கின்றது. எனவே, எங்களுக்கு இன்னும் எட்டு அல்லது 10 நாட்களின் பின்னரே நிலவரங்கள் தொடர்பில் சரியான விளக்கம் ஒன்றினை பெற்றுக் கொள்ள முடியும். அதன் பின்னரே எமக்கு தீர்மானம் ஒன்றையும் எடுக்க முடியும்.”
பங்களாதேஷ் இலங்கை அணியுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர் கொழும்பு, காலி, கண்டி ஆகிய இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<