இலங்கை கிரிக்கெட் வீரர்களின் கொவிட்-19 (கொரோனா) வைரஸிற்கு எதிராக உதவியவர்களின் பட்டியலில், இலங்கை டெஸ்ட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் டில்ருவான் பெரேராவும் இணைந்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும், கொவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவிவருகின்றது. இதில், இலங்கையில் 7 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், 300 இற்கும் அதிகமானோர் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
IPL கிரிக்கெட்டின் சிறந்த பந்துவீச்சாளராக லசித் மாலிங்க தெரிவு
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டின்………….
இந்தநிலையில், இலங்கை கிரிக்கெட்டின் பல்வேறு வீரர்களும் கொவிட்-19 வைரஸிற்கு எதிராகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகின்றனர். இவர்களின் வரிசையில் டில்ருவான் பெரேரா, பாணந்துறை சுகாதார வைத்திய அலுவலகத்துக்கு செயற்கைச்சுவாச உபகரணங்களை (Ventilators) வழங்கியுள்ளார்.
இன்றைய தினம் வைத்திய அதிகாரிகளிடம் இந்த உபகரணங்களை டில்ருவான் பெரேரா நேரடியாக சென்று வழங்கி வைத்துள்ளார். குறிப்பிட்ட இந்த உபகரணங்களை மாலிந்த திக்மல்கொட வடிவமைத்து கொடுத்துள்ளார்.
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக இலங்கை கிரிக்கெட் சபை 25 மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்த நிலையில், திமுத் கருணாரத்ன உள்ளிட்ட இலங்கை அணியின் வீரர்கள், கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளுக்கு கொரோனா தொற்றுக்கு தேவையான வைத்திய உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதியினை வழங்கியிருந்தனர்.
அதுமாத்திரமின்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் COVID 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் ஒரு தொகைப் பணத்தை நன்கொடையாக வழங்கியதுடன், மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார அடங்கிய குழுவொன்று 6000 உலர் உணவு பொதிகளை வழங்கியிருந்தது.
இவர்களின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் முன்வந்து கொரோனாவுக்கு எதிராக போராடவும், மக்களுக்காகவும் நிவாரண பொதிகளையும், நிதியினையும் வழங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<