கொரோனாவுக்காக ஒருநாள் சம்பளத்தைக் கொடுக்கும் விளையாட்டுத்துறை ஊழியர்கள்  

161

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா வைரஸுக்கு எதிரான நிதியத்துக்கு உதவும் வகையில், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகிய இரண்டு அரச நிறுவனங்களிலும் பணிபுரிகின்ற சுமார் 1800 ஊழியர்கள் தமது ஒருநாள் சம்பளத்தைக் கொடுப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இலங்கையில் 176 பேருக்கு கெரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டுத்தோட்ட சவாலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கிப் போயுள்ள இலங்கை கிரிக்கெட்….

கெரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். இதற்காக கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் ஜனாதிபதியினால் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

இதற்கு பல்வேறு பிரபலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இதன்படி, கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கான இதுவரை 314 மில்லியன் ரூபா பணம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் சேவைகள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் யோசனைக்கு அமைய, அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட ஊழியர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

இதன்படி, மிகவிரைவில் இந்தப் பணத்தை கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சை முன்மாதிரியாகக் கொண்டு அமைச்சின் கீழ் உள்ள அனைத்து சங்கங்களும் இந்த நிதியத்துக்கு தங்களது பணங்களை கொடுத்து உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து விளையாட்டுக்களும் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த வைரஸின் தாக்கம் முழுமையாக அகன்ற பிறகு அனைத்து தேசிய குழாங்களையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.

இதனிடையே, விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் ஆலோசனைக்கு அமைய கொரோனா வைரஸிற்கான பாதுகாப்பு நடவடிக்கைக்காக கொழும்பில் தங்கியுள்ள பொலிஸ் விசேட அதிரடி படைப் பிரிவைச் சேர்ந்த 500 அதிகாரிகளுக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் விடுதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகதார அமைச்சின் மேலதிக தேவைகளுக்கான விளையாட்டுத்துறை அமைச்சின் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க