கடந்த 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற T20 உலகக் கிண்ண தொடருக்கு முன்னர் இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான தொடர் ஒன்றிற்கு பங்களாதேஷ் சென்றிருந்தது. அதன் முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட பங்களாதேஷின் பந்துவீச்சிற்கு தாக்குபிடிக்க முடியாமல் தங்களது சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக இழந்தனர்.
இலங்கை அணி 64 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் தள்ளாடியது. 8 ஆவது விக்கெட்டிற்காக ஆட வந்தார் திசர பெரேரா. அணி 8 ஆவது விக்கெட்டையும் இழந்தது. இப்போது பெரேரா ஏதாவது செய்தாக வேண்டும் எனும் நிலை இருந்த போது அணி எதை எதிர்பார்த்ததோ அதை அவர் வழங்கினார். சஜித்ர சேனநாயகவுடன் இணைந்து 82 ஓட்டங்கள் இணைப்பாடத்தை வழங்கினார்.
ஏழை குடும்பங்களுக்கு இலங்கை முன்னாள் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் உதவி
இலங்கை கிரிக்கெட் அணியின்…………………
இதன் காரணமாக பெரேரா இன்னிங்ஸ் முடிவின்போது 80 ஓட்டங்களை குவித்து அணியை திடமான நிலைக்கு கொண்டு சென்றார். அந்த போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இது திசர பெரேரா மட்டுமல்ல. முழு இலங்கை ரசிகர்களும் கொண்டாடிய ஒரு போட்டியாகவும் மாறியது.
இலங்கை அணி பல சகலதுறை வீரர்களை உருவாக்கிய ஒரு அணி. அந்த வீரர்களில் ஒருவர் திசர பெரேரா. இலங்கையின் ஏனைய சகலதுறை வீரர்களை விட அதிகூடிய ஓட்ட வேகம் (Strike Rate) கொண்ட வீரர். இலங்கை வீரர்களில் அதிக ப்ரீமியர் லீக் போட்டிகளில் ஆடிய வீரர். அண்மையில் உலக பதினொருவர் (World XI) அணியை பிரதிநிதித்துவம் செய்து பாகிஸ்தானிற்கு சுற்றுத் தொடர் ஒன்றை மேற்கொண்டார். மேலே கூறியது போன்று பல சந்தர்ப்பங்களில் இலங்கை அணியை தோல்வியின் விளிம்பில் இருந்து மீட்டெடுத்து வெற்றிக்கு வழி வகுத்த ஒரு வீரரும் கூட. டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக ஆடாத போதிலும் ஒருநாள் மற்றும் T20 போட்டிகள் பலவற்றில் ஆடி அசத்தியவர்.
ஒருநாள் போட்டிகளில் 131 இன்னிங்ஸ்களில் ஆடி 2316 ஓட்டங்களை குவித்து 172 விக்கெட்டுக்கைளயும் கைப்பற்றி உள்ளார். சராசரி குறைவு என்றாலும் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அணிக்கு ஒற்றை ஆளாய் நின்று வெற்றிகளை பெற்றுதந்திருக்கும் ஒரு வீரர்.
நியூசிலாந்திற்கு எதிராக ஒருநாள் போட்டியில் தனது அதி கூடிய ஓட்டமான 140 ஓட்டங்களை குவித்தார் எனினும் இப்போட்டி தோல்வியில் முடிவடைந்தது. இலங்கை அணி இமாலய ஓட்ட இலக்கை துரத்திய இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஒரே வீரர் திசர தான். பங்களாதேஷ் அணியுடன் பெற்ற 80* ஓட்டங்கள் மூன்றாவது சிறந்த ஓட்டப் பிரதி. 30 ஓட்டங்களிற்கு அதிகமான ஓட்டங்களை பெற்ற 21 போட்டிகளில் 12 போட்டிகளை வெற்றிபெற காரணமாக விளங்கிய வீரர் இவர்.
இதில் அதிகமான போட்டிகளில் ஸ்லோ பெர்போமென்ஸ் செய்தமையும் குறிப்பிடத்தக்கது. இவைகளுக்கு மேலாக, இரண்டாயிரம் ஓட்டங்களிற்கு மேல் பெற்றுகொண்ட வீரர்களுள் அதிகூடய ஓட்ட வேகத்தைக் கொண்ட வீரர்களுள் நான்காவது இடம் இவருக்கு உண்டு.
இலங்கை அணியில் சனத் ஜெயசூர்யா போன்று சிக்ஸ் அடித்து அசத்தும் வீரர்கள் மிக குறைவு. அந்த குறையை நிவர்த்தி செய்யவந்த ”அயன் மேன்” தான் திசர பெரேரா.
ஒரே இன்னிங்ஸில் 13 சிக்சர்களை விளாசி அதிகூடிய சிக்சர்களை ஒரே இன்னிங்ஸில் விளாசிய வீரர்கள் பட்டியலில் 8 ஆவது இடத்தில் இருப்பவர் திசர. இலங்கை அணி Low order இல் ஓட்டங்களை பெற தடுமாறிய போதெல்லாம் சக வீரர்களுடன் இணைப்பாட்டங்களை தோற்றுவித்து இலங்கை அணிக்கு கை கொடுத்தவர். 6 மைதானங்களில் ஏழாம், எட்டாம், ஒன்பதாம் விக்கெட்டுகளுக்கு இணைப்பாட்ட சாதனையை கொண்டவர்.
இதேபோன்று, T20 போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பெரிதும் இலங்கை அணிக்கு உதவினார் திசர. 30 இற்கு அதிகமாக ஓட்டங்களை குவித்த 21 போட்டிகளில் 11 போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டது. இந்த போட்டிகளில் துடுப்பாட்டத்தில் திசரவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது.
திசரவின் அதிரடி ஆட்டத்தையும், வலிமையான துடுப்பாட்டத்தையும் கண்டு பல அணிகள் ப்ரீமியர் லீக் தொடர்களில் ஆட அவரை ஒப்பந்தம் செய்துகொள்ள போட்டி போடும். இந்த போட்டிக்கு ஏற்பவே அவர் பல ஆட்டங்களை வென்று கொடுத்து தன் மீதான நம்பிக்கைக்கு சான்று காண்பித்துள்ளார்.
கொரோனாவுக்காக உலகக் கிண்ண ஜேர்ஸியை ஏலம் விட்ட ஜோஸ் பட்லர்
கொரோனா நோயாளிகளுக்கு…………………….
ஒருநாள் போட்டிகள் போன்று T20 யிலும் 1000 ஓட்டங்களை கடந்த வீரர்களுள் அதிகூடிய ஓட்ட வேகத்தினைக் கொண்ட வீரர்களுள் நான்காம் இடத்தை தனதாக்கி கொண்ட்வர் இந்த அயன் மேன். அதேபோன்று, T20 போட்டிகளில் அதிகூடிய சிக்ஸர்களை பறக்கவிட்ட வீரர்களில் திசர 81 இன்னிங்ஸ்களில் 64 சிக்ஸர்களுடன் நான்காம் இடத்தை தனதாக்கினார். இப்பட்டியலில் இலங்கையை சேர்ந்த ஒரே வீரர் இவர் தான். 11 மைதானங்களில் ஆறாம், ஏழாம், எட்டாம் விக்கெட்டுகளுக்கான இணைப்பாட்ட சாதனைகளையும் கொண்டுள்ளார்.
துடுப்பாட்டத்தை போன்று பந்துவீச்சிலும் தன்னுடைய திறமையை உலகுக்கு நிரூபித்தார் திசர. ஒருநாள் போட்டிகளில் மூன்றிற்கு அதிகமான விக்கெட்டுகளை பெற்ற 20 போட்டிகளில் 17 போட்டிகளை இலங்கை அணி வெற்றிகொண்டது. இந்த போட்டிகளில் பந்துவீச்சில் திசரவின் ஆதிக்கமே அதிகம் காணப்பட்டது. ஒருநாள் போட்டிகளில் திசரவிற்கு அதிகம் பிடித்துபோன அணி என்றால் அது பாகிஸ்தான் தான்! பாகிஸ்தானுடனேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
மொத்தம் 37 விக்கெட்டுகளை பாகிஸ்தானுடனும் 36 விக்கெட்டுகளை இந்தியாவுடனும் 20 விக்கெட்டுகளை முறையே அவுஸ்திரேலியா மற்றம் தென்னாபிரிக்காவுடனும் பெற்றுள்ளார். இவற்றுள் சில சிறந்த பந்துவீச்சு பிரதி பலம்மிக்க இந்தியாவுடனும் பாகிஸ்தானுடனுமே.
இந்தியாவை 103 ஓட்டங்களிற்குள் கட்டுப்படுத்த அப்போட்டியில் 5 விக்கெட்டுகளை (28 ஓட்டங்கள்) பறித்து அணிக்கு உதவினார். அதேபோல், பாகிஸ்தானுடன் 4 விக்கெட்டுகளை (34 ஓட்டங்கள்) பெற பாகிஸ்தான் 102 ஓட்டங்களிற்கு சுருண்டது.
இவரது ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பந்துவீச்சு பிரதியான 44 ஓட்டங்களிற்கு 6 விக்கெட் எனும் சாதனையை பாகிஸ்தான் தான் தாரைவார்த்தது. தான் கைப்பற்றிய 172 சர்வதேச ஒருநாள் விக்கெட்டுக்களில் 61 விக்கெட்டுக்கள் Top order batsmen களுடையவை. ஒருநாள் போட்டிகளில் வாஸ், பர்வீஸ் மஹரூப், மலிங்காவிற்கு பிறகு ஹெட்ரிக்கை பெற்ற இலங்கை பந்துவீச்சாளரும் இவர்தான்.
T20 பந்துவீச்சில் பெரிதும் இலங்கை அணிக்கு பங்களிப்பு செய்தவர் திசர. T20 யில் 51 விக்கெட்டுக்களை தனதாக்கிய திசர 18 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணியுடன் பெற்றார். 36 விக்கெட்டுகள் இலங்கைக்கு வெளியில் கிடைத்தவை. தனது 51 விக்கெட்டுகளில் 32 ஐ Middle order batsmen களுக்கு எதிராக பெற்றவை. இந்திய அணிக்கு எதிராக ஒரு ஹெட்ரிக் ஐயும் பெற்று ஒருநாள், T20 என இரண்டிலும் ஹெட்ரிக் பெற்ற பந்துவீச்சாளர்களின் குழுமத்தில் இணைந்தார் அயன் மேன்!
இவ்வாறு இலங்கை அணிக்காக துடுப்பாட்டம் பந்துவீச்சு என இரண்டிலும் உதவிய ஒரு சிறந்த சகலதுறை வீரர் தான் திசர பெரேரா. களத்தடுப்பிலும் திசர சிறந்து விளங்குபவர். ஒருநாள் போட்டிகளில் 2000 க்கு அதிகமான ஓட்டங்களையும் 150 க்கு அதிகமான விக்கெட்டுக்களையும் பெற்ற வீரர் என்ற பெருமையும் T20இல் ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை பெற்று 50 இற்கு அதிகமான விக்கெட்டுக்களையும் பெற்றவர் எனும் பெருமையையும் பெற்ற ஒரு சகலதுறை வீரர்!
ஒரு சிறந்த சகலதுறை package ஆக இருந்தபோதிலும் திசர தொடர்ச்சியான பெர்போமென்ஸ் வழங்கியதில்லை! தொடர்ந்து சிறப்பாக ஆடுவாரேயானால் இலங்கை அணிக்கு ஒரு சிறந்த சகலதுறை வீரராக திகழ்வார்.
2011 உலக கிண்ண இறுதி போட்டியிற்கு மெதிவ்ஸை நிறுத்தி விட்டு திசரவை உள்வாங்கியிருப்பார் சங்கா! அந்த போட்டியில் இறுதி ஓவரில் சஹீர் கானின் பந்துவீச்சிற்கு 19 ஓட்டங்களை பெற்று இலங்கைக்கு ஒரு சிறந்த வெற்றி இலக்கை அடைய உதவினார் திசர பெரேரா.
இவை அனைத்தும் எதற்காக? நேற்று முன்தினம் தான் திசர தனது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். எனவே, அதற்கான ஒரு சமர்ப்பனமே இந்த ஆக்கம்
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<