புல்தரை மைதானத்தில் நடைபெறும் வருடத்தின் மிகப் பெரிய கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் எதிர்வரும் ஜூன் 29ஆம் திகதி தொடங்கி ஜூலை 12ஆம் திகதி வரை நடைபெறுவதாக இருந்த இத்தொடர் இரத்து செய்யப்படுவதாக விம்பிள்டன் தொடரை நடத்தி வரும் அகில இங்கிலாந்து டென்னிஸ் கழகத்தின் தலைவர் இயென் ஹெவிட் நேற்று (01) அறிவித்தார்.
இதன்படி, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் விம்பிள்டன் தொடர் இரத்தாவது இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதத்தில் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020…..
1915 முதல் 1918 வரை முதலாவது உலகப் போர் காரணமாகவும், 1940 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் காரணமாகவும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இரத்து செய்யப்பட்டன.
இதில் குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்து இராணுவ, துணை இராணுவப் படை வீரர்கள் அகில இங்கிலாந்து டென்னிஸ் கழகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்ததால் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1940 முதல் 1945 வரை இரத்து செய்யப்பட்டது.
அதுமாத்திரமின்றி, போட்டி நடைபெறும் பிரதான மைதானம், முயல், கோழி, பன்றி வளர்ப்புக்கான சிறிய பண்ணையாக மாற்றப்பட்டிருந்தது.
1940 ஒக்டோபர் 11ஆம் திகதி ஜேர்மனி நாட்டு படை வீசிய குண்டு மைதானத்தின் ஒரு பகுதியை தாக்கியதில் 1,200 இருக்கைகள் சேதமடைந்தன.
அப்போது இரத்து செய்யப்பட்டிருந்த விம்பிள்டன் போட்டி 1946ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடைபெறத் தொடங்கியது.
உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் 2022க்கு ஒத்திவைப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஜூலை மாதம் நடைபெறும்……
தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ள பல முக்கிய விளையாட்டுத் தொடர்களின் வரிசையில் விம்பிள்டனும் இணைந்து கொண்டுள்ளது.
இதனிடையே, இவ்வருடம் இரத்து செய்யப்பட்டுள்ள விம்பிள்டன் டென்னிஸ் தொடர், 2021ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி முதல் ஜூலை 11ஆம் திகதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
It is with great regret that the AELTC has today decided that The Championships 2020 will be cancelled due to public health concerns linked to the coronavirus epidemic.
The 134th Championships will instead be staged from 28 June to 11 July 2021.https://t.co/c0QV2ymGAt
— Wimbledon (@Wimbledon) April 1, 2020
இந்த நிலையில், விம்பிள்டன் டென்னிஸ் போட்டிக்கான டிக்கெட் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது அதற்கு பதிலாக அடுத்த ஆண்டு தொடருக்கு இப்போதே இரண்டு டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
அதேசமயம், விம்பிள்டன் போட்டிகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், நியூயோர்க்கில் ஆகஸ்ட் 31ஆம் திகதி திட்டமிட்டபடி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரை நடத்த முடியும் என அதன் ஏற்பாட்டுக் குழு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் நடைபெறும் மைதானத்தின் உள்ளரங்குகளை தற்காலிக மருத்துவமனையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலையில் திட்டமிட்ட காலத்தில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியை நடத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதற்கேற்றார் போல எங்களது பணிகளும் தொடர்ந்து நடைபெறும். தற்போதைய நிலையையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அனைத்து முன்னேற்பாடுகளையும் உரிய முறையில் செய்துள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது
நியூயோர்க்கில்தான் கொரோனா வைரஸ் மிகக் கடுமையாக பரவி வருகிறது. இதனால் மொத்த நியூயோர்க்கும் ஸ்தம்பித்துப் போயுள்ளது.
அமெரிக்க டென்னிஸ் சங்கம் தற்போது அரசு மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்றார் போல செயல்பட்டு வருகிறது.
“நாம் உங்களை வெறுக்கிறோம்” ரொனால்டோவிடம் கூறிய டிபாலா
போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ….
இந்த வருடத்துக்கான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியானது ஆகஸ்ட் 31ஆம் திகதி தொடங்கி செப்டம்பர் 13ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகள் இரத்து செய்யப்பட்டு விட்டன. விம்பிள்டன் டென்னிஸ் தொடரும் இரத்தாகி விட்டது.
இந்த நிலையில், வருடத்தின் இறுதி கிரான்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<