கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா அடுத்த வருடம் ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருப்பதுடன், சர்வதேச விளையாட்டு போட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச போட்டிகள் இரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் இருக்கின்றன.
கொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19)…..
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. இறுதியாக 2016ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது.
இந்த வருடத்துக்கான ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் எதிர்வரும் ஜூலை 24ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 9ஆம் திகதி வரை நடத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
எனினும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற காரணத்தால் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் நலன் கருதி சர்வதேச ஒலிம்பிக் பேரவை மற்றும் ஜப்பான் அரசாங்கம் என்பன இணைந்து ஒரு வருடத்துக்கு ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பபதற்கு தீர்மானித்தது.
இதனையடுத்து இவ்வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டு விழா அடுத்த வருடம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு ஒலிம்பிக் விழாவை எந்த திகதியில் நடத்துவது என்பது குறித்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர்கள், சர்வதேச ஒலிம்பிக் பேரவையுடன் விசேட ஆலோசனை நடத்தினார்கள்.
இதன்போது டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு தலைவர் யோஷிரோ மோரி, டோக்கியோ நக ஆளுநர் யூரிகோ கொய்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது வெப்பம் குறைவாக உள்ள நேரத்தில்தான் மரதன் உள்ளிட்ட போட்டிகளை நடத்த முடியும் என்று டோக்கியோ நகர ஆளுநர் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா அடுத்த வருடம் ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் பேரவை நேற்று (30) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
கொரோனாவினால் இலங்கையின் விளையாட்டுத் துறையில் ஏற்பட்ட மாற்றம்
சீனாவில் உருவாகி, இன்று உலகையே……
இதேநேரம், பரா ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆகஸ்ட் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்காக ஜப்பான் அரசு 12.6 பில்லியன் டொலர்கள் செலவு செய்திருந்தது. தற்போது ஒரு வருடத்துக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மேலும் 6 பில்லியன் டொலர் செலவழிக்கும் நிலை ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.
இதுஇவ்வாறிருக்க, இந்த வருடம் நடைபெறவிருந்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்காக டிக்கெட் வாங்கியவர்கள் அதனை அடுத்த வருடம் உபயோகித்துக் கொள்ளலாம் என்று சர்வதேச ஒலிம்பிக் பேரவை அறிவித்துள்ளது.
அதுமாத்திரமின்றி, டிக்கெட்டுகளை உபயோகப்படுத்த விரும்பாதவர்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பிந்திய ஐரோப்பிய கால்பந்து
உலகெங்கும் கிட்டத்தட்ட அனைத்து விளையாட்டுகளும்…..
இதனிடையே, ஒலிம்பிக் போட்டிக்கு ஏற்கனவே தகுதி பெற்றவர்கள் 2021இல் நேரடியாக பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சர்வதேச ஒலிம்பிக் பேரவை அனைத்து சர்வதேச விளையாட்டு சம்மேளன நிர்வாகிகளுடன் டெலிகான்பரன்ஸ் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன் தீவிர ஆலோசனை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் 2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள வீரர், வீராங்கனைகள் அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நேரடியாக பங்கேற்க தகுதி படைத்தவர்கள் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<