ரியல் மெட்ரிட் கால்பந்து கழக வீரரான லூக்கா ஜோவிக் கொரோனா வைரஸ் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட விடயம் ஒன்று தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டிருக்கின்றார்.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தப் பருவகாலத்திற்கான ”லாலிகா (La Liga)” கால்பந்து தொடர் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதனை அடுத்து ரியல் மெட்ரிட் கழக முன்கள வீரரான லூக்கா ஜோவிக், தனது தாயகமான சேர்பியாவுக்கு திரும்பியிருந்தார்.
சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து
நிலைமைகள் இவ்வாறு இருக்க, ரியல் மெட்ரிட் கழகத்தின் கூடைப்பந்து வீரர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியமை இனங்காணப்பட்டிருந்தது. இதனால், ரியல் மெட்ரிட் கழகத்தின் வீரர்கள் அனைவரும் தங்களை 28 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு (Self Quarantine) அணி நிர்வாகத்தினால் பணிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இதற்கு மாற்றமாக லூக்கா ஜோவிக் தனது தாயகமான சேர்பியாவில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி வெளியே சென்றது அவதானிக்கப்பட்டது.
இவ்வாறு லூக்கா ஜோவிக் விதிமுறைகளை மீறி வெளியேறியது குற்றம் எனக் கூறப்பட்டு தொடர்ந்து கால்பந்து உலகில் அனைவரும் பேசும் விடயங்களில் ஒன்றாகவும் மாறியது.
எனினும் விதிமுறைகளை மீறி வெளியே சென்றதுக்கு விளக்கம் கூறியிருக்கும் 22 வயது நிரம்பிய லூக்கா ஜோவிக் தனிப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பில் தான் தெளிவுடன் இருந்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.
”நான் எனது தனிமைப்படுத்தல் செயற்பாட்டினை மீறி நடந்து கொண்டிருந்தேன். ஏனெனில், நான் எனக்கு வழங்கப்பட்ட விதிமுறைகள் தொடர்பில் கவனத்துடன் இருக்கவில்லை.”
”(நான் விதிமுறைகள் பற்றி அறியவில்லை என்பது) உண்மையில் நம்புவதற்கு கடினமான ஒரு விடயம். ஆனால், அதுதான் உண்மை.”
”உண்மையிலேயே நான் இருந்த நாட்டில் (ஸ்பெயினில்), ஏன் இத்தாலியில் கூட, நாங்கள் இணையங்களில் பார்ப்பது போன்று தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் குப்பைகளை போடுவதற்காகவோ அல்லது மருந்து வாங்குவதற்காகவோ அல்லது கடைகளில் கொள்வனவு செய்யவோ ஒரு தடவையேனும் வெளியில் செல்வதைக் காண முடியும்.”
”நான் அதே மாதிரியான சட்டங்களே சேர்பியாவிலும் இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால், நான் போதிய அளவு ஆய்வு செய்திருக்கவில்லை.”
கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A, பிரான்ஸ் லீக் 1 மற்றும் ஜெர்மனி புன்டஸ்லிகா…
தனது தாயகமான சேர்பியாவிற்கு வர முன்னர் லூக்கா ஜோவிக், ஸ்பெியனில் தங்கியிருந்தார். ஸ்பெயின் ஜரோப்பாவில் இத்தாலிக்குப் பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
”உண்மையிலேயே நான் எனது அறியாமைக்கு அதிகாரம் கொண்டவர்களை பலிக்கடாவாக்கவில்லை. நான் என்னைத் தனிமைப்படுத்திக்கொள்வது தொடர்பில் அறிந்திருந்தேன். ஏனெனில், இது பற்றிய ஆவணமும் என்னிடம் இருந்தது.”
”எனது அறியாமை, எனக்கு தனிமைப்படுத்தி கொண்டிருக்கும் போது என்ன செய்வது என்பது பற்றி தெரியாமல் இருந்ததாகும். உண்மையாக இதற்கு காரணம் நான் எனக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளை சரியாக பின்பற்றாமை என்பதை மீண்டும் உறுதி செய்து கொள்கின்றேன்.”
அதோடு, மேலும் பேசிய லூக்கா ஜோவிக் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி என்ன எதிர்வினை வருமோ அதனை ஏற்றுக்கொள்ள தயராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அதேநேரம், தனது மகனின் செயல் குறித்து பேசிய லூக்கா ஜோவிக் இன் தந்தை மிலான் ஜோவிக் தாங்கள் சேர்பிய நாட்டு அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு அடிபணிவதாக கூறியிருந்தார்.
”ஜோவிக் இரண்டு தடவைகள் கொரோனா தொற்றுக்காண பரிசோதனைகளைச் செய்திருந்தார். இரண்டு தடவைகளும் அவருக்கு நொய்த் தொற்று ஏற்படவில்லை என்றே முடிவுகள் வந்திருந்தன.”
”ஆனால், தற்போது அவரினை எல்லோரும் ஒரு பாரிய குற்றவாளி போல் பார்க்கின்றனர். (இந்த செயலுக்காக அவர்) சிறைச்சாலை செல்ல வேண்டி வந்தாலும் அங்கே செல்லட்டும்.”
இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை மீறி நடந்த விடயத்திற்காக சேர்பிய அரசாங்கத்தினால் லூக்கா ஜோவிக்கிற்கு தண்டனைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புண்டஸ்லிகா (Bundesliga) கால்பந்து தொடரில் ஆடும், எயின்ட்ராச் பிராங்பூட் கழகத்தில் இருந்து லூக்கா ஜோவிக், கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரியல் மெட்ரிட் கழகத்திற்காக 79 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க<<