ஐரோப்பா மாத்திரமல்ல உலகெங்கும் பிரதான கால்பந்து போட்டிகள் முடக்கப்பட்டிருந்தபோதும் ஒரே ஒரு நாடு கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தனது கால்பந்து பருவத்தை ஆரம்பித்துள்ளது.
ரஷ்யா மற்றும் போலந்து நாட்டு எல்லையை ஒட்டி இருக்கும் பெலாரஸ் நாட்டின் ப்ரீமியர் லீக் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் பற்றி பெரிதும் கவலை கொள்ளாத அந்நாட்டு ஜனாதிபதியும் குடிமக்களுக்கு டிரக்டர் ஓட்டுவதன் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி கூறியிருக்கின்றார்.
கொரோனா வைரஸும் கால்பந்து உலகும்
இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா, இத்தாலி சீரி A, பிரான்ஸ் லீக் 1 மற்றும் ஜெர்மனி புன்டஸ்லிகா என ஐரோப்பாவின் அனைத்து பிரதான கழக மட்ட கால்பந்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. கோப்பா அமெரிக்கா தொடர், 2020 யூரோ கிண்ணம் ஆகியன அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இவ்வருடம் நடைபெறவிருந்த யூரோ … கொரோனா வைரஸ் பாதிப்பால் ஸ்பெயின் கழக கால்பந்து பயிற்சியாளரும் வீரருமான…
உலகப் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரங்களும் தமது நாட்டின் பெலாரஸ் ப்ரீமியர் லீக்கில் விளையாட வரக்கூடும் என்று ஆர்சனல் மற்றும் பார்சிலோனா அணியின் முன்னாள் வீரர் அலெசாண்டர் ஹ்லெப் ஆச்சரியத்தை வெளியிட்டிருந்தார். தமது நாட்டில் கொரோனா வைரஸ் பற்றி எவரும் கவலைப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்புகளின் ஒன்றியமான UEFA இந்த கால்பந்து பருவத்தை பூர்த்தி செய்வது குறித்து விவாதித்துக் கொண்டிருந்த கடந்த வியாழக்கிழமை (19) பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க்கில் அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு பெலாரஸ் ப்ரீமியர் லீக் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.
அன்றைய தினத்திலேயே துருக்கி சுப்பர் லீக்கும் இடை நிறுத்தப்பட்டது. ஆனால் சுமார் ஆயிரம் பார்வையாளர்கள் முன் நடைபெற்ற பெலாரஸ் ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில் எசெர்ஜடிக் அணி பலம்மிக்க பேட் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்கடித்து அதிர்ச்சி அளித்தது. அதாவது இந்த போட்டி நடைபெற்ற தலைநகரின் பல்கலைக்கழக அரங்கில் பாதி இருக்கைகள் நிரம்பி இருந்தன.
இந்தத் தொடரில் இஸ்லொக் மின்ஸ் அணிக்காக கடந்த ஆண்டு அலெசாண்டர் ஹ்லெப் தனது பங்களிப்பைச் செய்திருந்தார். எனினும், இந்தப் பருவத்தில் தனது பழைய கழகம் கடந்த சனிக்கிழமை தனது முதல் போட்டியில் ஆடியபோது முன்னெச்சரிக்கையாக அவர் வீட்டிலேயே தங்கியிருந்தார். ஆனால் பெலாரஸில் இவ்வாறான முன்னெச்சரிக்கையில் சிறிய எண்ணிக்கையிலானோரே ஈடுபட்டுள்ளனர்.
“பெலாரஸில் இது பற்றி (வைரஸ்) யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. இதனை நம்ப முடியவில்லை.”என்று கடந்த ஆண்டு கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற ஹ்லெப் ‘தி சன்’ பத்திரிகைக்கு தெரிவித்தார்.
“அனைத்து உலகும் இப்போது பெலாரஸ் லீக்கை பார்க்கின்றன. அனைவரும் தொலைக்காட்சி முன் இருந்து எம்மை பாருங்கள். என்.எச்.எல். போட்டிகள் நிறுத்தப்பட்டபோது ஐஸ் ஹொக்கி வீரர்கள் ரஷ்யாவுக்கு விளையாடச் சென்றார்கள். பெலாரஸ் லீக் தொடருவதால் சில நேரம் லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இங்கு வரக்கூடும்” என்றும் அவர் கூறினார்.
சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய ரொனால்டினோவுக்கு சக வீரர்கள் வாழ்த்து
பிரேசில் முன்னாள் நட்சத்திர வீரர் ரொனால்டினோ பரகுவே ……..
என்.பி.ஏ., என்.எச்.எல். போன்ற அமெரிக்க லீக் போட்டிகள் உட்பட ஐரோப்பிய சம்பின்ஸ் லீக், ப்ரீமியர் லீக் மற்றும் லா லிகா என அனைத்து பிரதான கால்பந்து போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. என்றாலும் முன்னாள் சோவியட் ஒன்றிய நாடான பெலாரஸ் இன்றும் தனது பிரதான லீக் போட்டிகளை ஆடும் ஒரே நாடாக இடம்பெற்றுள்ளது.
“கொரோன வைரஸ் காரணமாக சம்பியன்ஸ் லீக் மற்றும் ஐரோப்பிய லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனை தடுக்க முயற்சிப்பதால் இது நல்லது. UEFA நல்ல நடவடிக்கையையே செய்துள்ளது. இதனை எமது நாட்டில் புரியவைப்பது கடினம். அனைத்து லீக் போட்டிகளும் நிறுத்தப்பட்டபோதும் அதனை ஒரு பிரச்சினையாக நாம் பார்க்கவில்லை. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அனைவரும் அடுத்த போட்டிக்கு தயாராக சாதாரணமாக பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று அலெசாண்டர் ஹ்லெப் கூறுகிறார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் உலகெங்கும் இருக்கும் நாடுகள் போன்ற தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெலராஸ் அரசு முன்னெடுப்பதில்லை. இத்தனைக்கும் பெலாரஸில் திங்கட்கிழமை (23) மேலும் ஐந்து பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு அந்நாட்டில் பாதிப்புற்றவர்களின் எண்ணிகை 81 ஆக அதிகரித்துள்ளது.
ஆனால், அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ, “மேற்கு ஐரோப்பாவைப் போன்ற அதே மனோநிலையில் பெலாரசியர்கள் இல்லை” என்று கடந்த வாரம் கூறியிருந்தார். “நாட்டிலே எவரும் வைரஸ் பற்றி பேசுவதில்லை. கிராமப்புறங்களில் டிரக்டர்கள் அனைவரையும் குணப்படுத்தும். வயல் நிலங்கள் அனைத்தையும் குணப்படுத்தும்” என்றார்.
பெலாரஸ் தேசிய அணிக்காக ஆடிய ஹ்லெப் இது பற்றி கூறும்போது, “இத்தாலி மற்றும் ஸ்பெயினில் என்ன நடந்தது என்று எல்லோருக்குமே தெரியும். அது நல்லதல்ல. ஆனால் எமது நாட்டு ஜனாதிபதி நிர்வாகத்தினர் செய்திகள் கூறுவது போல் இது தீவிரம் கொண்டதல்ல என்று நம்புகின்றனர். பெரும்பாலான இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இதனை நம்புகிறார்கள். எனது குடும்பத்தினருடன் நான் வீட்டில் இருக்கிறேன். ஆனால் நான் வெளியே செல்லும் நேரத்தில் வீதிகள் மற்றும் உணவகங்கள் பரபரப்பாகவே காணப்படுகின்றன. ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் இது நிறுத்தப்படலாம். வைரசுக்கு என்ன நடக்கிறது என்று எமது ஜனாதிபதி காத்திருக்கலாம்” என்றார்.
பாலோ டிபாலாவுக்கு கொரோனா தொற்று
இத்தாலியின் முன்னணி கால்பந்து கழகமான ஜுவான்டஸின் நாட்சத்திர வீரர் பாலோ டிபாலாவுக்கும் ……..
ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரியாக உள்ள லுகாசென்கோ, 1994 தொடக்கம் பெலாரஸில் ஆட்சியில் உள்ளார். அந்த பிராந்தியத்தில் அதிக ஒடுக்குமுறை கொண்ட நாடாக பெலாரஸ் இருந்து வருகிறது. அங்கு கருத்துச் சுதந்திரம் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டு வருகின்றனர்.
>>மேலும் கால்பந்து செய்திகளை படிக்க <<