ரியல் மெட்ரிட் அடுத்தடுத்து தோல்வி: சிட்டியை வீழ்த்தியது யுனைடட்

156

இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் இத்தாலி சீரி A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (08) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு,

ரியல் மெட்ரிட் எதிர் ரியல் பெடிஸ்டா

ரியல் பெடிஸ்டா அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த ரியல் மெட்ரிட் அணி லா லிகா தொடரில் பார்சிலோனாவிடம் முதலிடத்தை இழந்தது.

முன்னாள் பார்சிலோனா முன்கள வீரரான கிறிஸ்டியன் டெல்லோ கடைசி நேரத்தில் கோல் பெற்று ரியல் பெடிஸ்டாவின் வெற்றியை உறுதி செய்த நிலையில் சம்பியன் பட்டத்திற்கான போட்டியில் பார்சிலோனா முன்னலை பெற்றுள்ளது.     

ரியல் மெட்ரிட் தற்போது 27 போட்டிகளில் 56 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருப்பதோடு கடந்த சனிக்கிழமை ரியல் சொசிடாட் அணியை 1-0 என தோற்கடித்த பார்சிலோன இரண்டு புள்ளிகள் இடைவெளியுடன் முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.  

பெனல்டி பெட்டிக்குள் சர்கியோ நபில் பெகிருடன் செர்கியோ ராமோஸ் மோதுண்டதற்கு பெனால்டி கேட்ட குழப்பத்திற்கு மத்தியில் 40 ஆவது நிமிடத்தில் பந்து சிட்னியிடம் கிடைத்தபோது அவர் வலையின் மேல் பகுதியில் செலுத்தி பெடிஸ்டா அணியை முன்னிலை பெறச் செய்தார். 

இந்நிலையில் முதல் பாதியின் மேலதிக நேரத்தில் மார்சலோ மீது எதிரணி பெனால்டி பகுதிக்குள் தவறிழைத்ததை அடுத்து ரியல் மெட்ரிட்டுக்கு கிடைத்த ஸ்பொட் கிக்கை கரிம் பென்சமா கோலாக மாற்றினார். அனைத்து போட்டித் தொடர்களிலும் அவர் கடந்த ஏழு போட்டிகளில் பெறும் முதல் கோல் இதுவாகும்.   

போட்டியில் பரபரப்பு அதிகரித்த நிலையில் அன்ட்ரெஸ் குவார்டாடோ வழங்கிய பந்தை கிறிஸ்டியன் டெல்லோ கோலாக மாற்றினார். 

இதன்மூலம் ரியல் மெட்ரில் கடைசியாக ஆடிய நான்கு போட்டிகளில் மூன்றாவது தோல்வியை சந்தித்தது. அந்த அணி கடைசியாக வெளி மைதானத்தில் ஆடிய லெவன்டே அணியுடனான போட்டியில் தோற்றநிலையில் கடந்த மாதம் சம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டியிடம் தோல்வியடைந்தது.  


செல்சி எதிர் எவர்டன்

ஸ்டான்போர்ட் பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் எவர்டன் அணியை 4-0 என்ற கோல் வித்தியாசத்தில் இலகுவாக தோற்கடித்த செல்சி அணி ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடருக்கு முன்னேறும் எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டது. 

இளம் வீரர் மேசன் மௌன்ட் 14 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பெற்ற நிலையில் பெட்ரோ 21 ஆவது நிமிடத்தில் மற்றொரு கொலை பெற்று செல்சியை முதல் பாதியில் 2-0 என முன்னிலை பெறச் செய்தனர். 

எவர்டன் ஆட்டத்திற்கு திரும்புவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. வில்லியன் 51 ஆவது நிமிடத்தில் செல்சி சார்பில் 3ஆவது கோலை பெற்றதோடு மூன்று நிமிடங்களில் ஒலிவியர் கிரௌட் நான்காவது கோலையும் புகுத்திய நிலையில் ஆட்டம் ஒரு மணி நேரத்தை எட்டும் முன்னரே செல்சியின் வெற்றி உறுதியானது.    

இந்த வெற்றியுடன் செல்சி ப்ரீமியர் லீக்கில் தனது நான்காவது இடத்தை தக்கவைத்து புள்ளிகளை அதிகரித்துக்கொண்டது. இதன்மூலம் சம்பியன்ஸ் லீக்கிற்கு தகுதி பெறுவதற்காக முதல் நான்கு இடத்தை தக்கவைத்துக் கொள்ள அந்த அணிக்கு பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 


மான்செஸ்டர் யுனைடட் எதிர் மான்செஸ்டர் சிட்டி

ப்ரீமியர் லீக் நடப்புச் சம்பியன் மான்செஸ்டர் சிட்டி அணியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய மான்செஸ்டர் யுனைடட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக்கிற்கு முன்னேறும் வாய்ப்புக்காக தொடர்ந்து போராடி வருகிறது. இதில் மான்செஸ்டர் சிட்டி கோல்காப்பாளர் எடர்சன் செய்த இரு தவறுகளே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.  

மான்செஸ்டர் சிட்டியை தனது சொந்த மைதானமான ஓல்ட் டிரபர்டில் மான்செஸ்டர் யுனைடட் வீழ்த்துவது 2015 ஆம் ஆண்டுக்குப் பின் இது முதல் முறையாக இருந்தது. இதன்மூலம் யுனைடட் அணி ப்ரீமியர் லீக்கில் முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறும் வாய்ப்பை தாக்கவைத்துக்கொண்டுள்ளது. 

தற்போது ஐந்தவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டிருக்கும் மான்செஸ்டர் யுனைடட் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் 3 புள்ளிகளே பின்தங்கியுள்ளது.  

அதேபோன்று இந்த போட்டி முடிவுடன் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல் அணி 30 ஆண்டுகளின் பின் முதலாவது ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை சுவீகரிக்க இன்னும் இரண்டு போட்டிகளில் வென்றால் போதுமானதாக உள்ளது.   

இதில் 30 ஆவது நிமிடத்தில் அன்தோனி மார்சல் மற்றும் மேலதிக நேரத்தில் ஸ்கொட் மக்டோமினாய் பந்தை வலைக்குள் செலுத்தியபோது இரு சந்தர்ப்பங்களிலும் சிட்டி கோல்காப்பாளர் பந்தை தடுப்பதில் தவறிழைத்தார்.   

சிட்டி அணி சார்பில் இரண்டாவது பாதியில் சர்கியோ அகுவேரோ வலைக்குள் புகுத்திய பந்து ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.      


ஜுவான்டஸ் எதிர் இன்டர் மிலான்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இன்றில் மூடிய மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இன்டர் மிலான் அணியை 2-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜுவான்டஸ் அணி சீரி A தொடரில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.  

வரும் ஏப்ரல் 3 ஆம் திகதிவரை போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு இத்தால் நிர்வாகம் எடுத்த முடிவினாலேயே அந்நாட்டு கால்பந்து பருவத்தின் மிகப்பெரிய போட்டியான இந்த ஆட்டம் வெறிச்சொடிய அரங்கில் நடைபெற்றது. 

போட்டியின் முதல் பாதி கோலின்றி முடிவுற்ற நிலையில் மத்தியகள வீரர் ரம்சி 54 ஆவது நிமிடத்தில் நேர்த்தியான கோல் ஒன்றை பெற்றார். தொடர்ந்து 67ஆவது நிமிடத்தில் டிபலா இரண்டாவது கோலை புகுத்தினார்.   

இந்நிலையில் தவறிழைத்த டானியல் பெடல்லி சிவப்பு அட்டை பெற்று வெளியேறியது இன்டர் மிலான் அணிக்கு மற்றொரு பின்னடைவாக இருந்தது. 

இதன்படி ஜுவான்டஸை விடவும் ஒன்பது புள்ளிகள் பின்தங்கி மூன்றாவது இடத்தில் இருக்கும் இன்டர் மிலானின் சம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு பெரும்பாலும் கைநழுவியுள்ளது. 

மறுபுறும் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த நவம்பர் 10 ஆம் திகதிக்குப் பின்னர் முதல் முறை சீரி A வில் கோல்பெறத் தவறியுள்ளார். முன்னர் அவர் தொடர்ச்சியாக 11 லீக் போட்டிகளில் கோல் பெற்று கப்ரியல் படிஸ்டுடா மற்றும் பாபியோ குவாக்லியரெல்லேவுடன் சாதனைப் பட்டியலில் இணைந்தார்.