ஆசிய கால்பந்து சம்மேளனம் (AFC) கால்பந்து வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டின் ஒருமைப்பாட்டுக்கு தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவதை குறித்துக்காட்டும் வகையில், AFC மருத்துவ அதிகாரிகள் மற்றும் FIFA ஊக்கமருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் கற்கை நிகழ்ச்சி இலங்கையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இலங்கையில் முதல் முறை ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாட்கள் கொண்ட இந்த கற்கை நிகழ்ச்சியில் 22 உறுப்பு சங்கங்களின் 58 பேர் பங்கேற்றனர். இதில் கால்பந்து வீரர்களின் ஆரோக்கியம் மற்றும் ஊக்கமருந்து எதிர்ப்பு நடைமுறையின் சிறந்த செயற்காடுகள் தொடர்பில் பல்வேறு அம்சங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து 17 பேரும், இந்தியா மற்றும் மலேசியாவில் இருந்து 5 பேரும், அவுஸ்திரேலியா மற்றும் ஈரானில் இருந்து 4 பேரும், பிலிப்பைன்சில் இருந்து மூவரும், பங்களாதேஷ், ஜப்பான், தாய்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து தலா இருவரும், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஈராக், ஜோர்தான், மியன்மார், தென் கொரியா, சவூதி அரேபியா, சிங்கப்பூர், தஜிகிஸ்தான், உஸ்பகிஸ்தான், வியட்நாம் மற்றும் யெமன் நாடுகளில் இருந்து தலா ஒருவரும் பங்கேற்றனர்.
விளையாட்டு மருத்துவத்தின் புதிய முன்னேற்றங்கள், அதேபோன்று அவைகளை AFC போட்டித்தொடர்களில் மேம்படுத்துவது தொடர்பில் பங்கேற்பாளர்கள் அறிவுபெறுவதற்கும் ஈடுபடுவதற்கும் இந்த கற்கை வழிவகுத்தது.
இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) தலைவர் அனுர டி சில்வா கூறியதாவது,
“எமது இந்த அழகான நாட்டில் இந்த கற்கையை ஏற்று நடத்துவதற்கு கிடைத்ததை இட்டு FFSL பெருமைகொள்கிறது. இலங்கை இந்த கற்கையை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இந்த சந்தர்ப்பத்தை வழங்கியதற்கு AFC மற்றும் FIFA வுக்கு நாம் நன்றி கூறிக்கொள்கிறோம். சிறந்த மற்றும் புதிய நடைமுறைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் பொதுவான இலக்கை நோக்கி நாம் அனைவரும் செயற்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
AFC மருத்துவக் குழுவின் பிரதித் தலைவர் மற்றும் FIFA மருத்துவக் குழுவின் உறுப்பினரான, டடோ டொக்டர் குர்சரன் சிங் கூறியதாவது,
“ஆசியாவில் கால்பந்து வீரர்களின் தரமான பராமரிப்பு ஒன்றில் ஒத்துழைப்பதற்கும் தமது அறிவை மேம்படுத்துவதற்கும் புதுப்பித்துக்கொள்வதற்கும் பங்கேற்பாளர்களுக்காக ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கற்கை நடத்தப்படுகிறது. அடுத்த நான்கு ஆண்டுகளில் கால்பந்து மருத்துவம் மற்றும் கால்பந்து ஊக்கமருந்து விவகாரம் இரண்டிலும் நாம் பல்வேறு விடயங்களை கையாள வேண்டி இருக்கும்.
தமது திறமையை மேம்படுத்துவதற்கு சிறந்த பராமரிப்பை எமது கால்பந்து வீரர்களுக்கு வழங்கி உயர் தரத்தில் எமது பணியை வழங்குவதற்கு AFC மூலம் எமக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒற்றுமை மற்றும் கோட்பாட்டை நாம் கடைப்பிடிக்கும் நிலையான வழிகாட்டல் தொடர்பில் இந்த கற்கையில் அனைத்து பங்கேற்பாளர்களும் கற்பார்கள்” என்று கூறினார்.
இந்த கற்கையில் ஆசியாவில் கடுமையான சூழல் பிரச்சினைகளை கையாள்வது மற்றும் அணியுடன் பயணிக்கும்போது மருத்துவ அதிகாரிகள் முகம்கொடுக்கும் சவால்கள் போன்ற சில பாடங்களும் உள்ளடக்கப்பட்டிருந்தன. பங்கேற்பாளர்கள் கால்பந்தில் ஊக்கமருந்துக்கு எதிரான செயற்பாடுகள் பற்றி FIFA இடமிருந்து கற்றுக்கொண்டதோடு புதுப்பிக்கப்பட்ட உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் (WADA) ஒழுங்குமுறைகளை பற்றிய அறிவையும் பெற்றுக்கொண்டனர்.