மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால்

172

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியுடன் இரண்டு ஒருநாள் பயிற்சிப் போட்டிகளில் ஆடுகின்றது. 

SLC தலைவர் பதினொருவர் அணியில் தரங்க, அசேல, திரிமான்ன

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட ………….

இந்த பயிற்சிப் போட்டிகளின் முதல் மோதல் கடந்த திங்கட்கிழமை (17) கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் இடம்பெற்ற நிலையில், இரண்டாவது பயிற்சிப் போட்டி நாளை (20) நடைபெறுகின்றது.  

கட்டுநாயக்கவில் இடம்பெறவுள்ள இந்த பயிற்சிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு 14 பேர் அடங்கிய கிரிக்கெட் சபை பதினொருவர் குழாத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. 

இலங்கை அணிக்காக கடந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே ஒருநாள் போட்டியொன்றில் ஆடிய தினேஷ் சந்திமால், குறிப்பிட்ட கால ஓய்வுக்குப் பின்னர் உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை காட்டியதன் மூலம் இலங்கை டெஸ்ட் அணியில் மீண்டும் இணைக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவதன் மூலம் இலங்கை ஒருநாள் அணியில் மீண்டும் இணைவதற்கான சந்தர்ப்பம் ஒன்றும் சந்திமாலுக்கு கிடைத்திருக்கின்றது. 

அதேநேரம், பானுக்க ராஜபக்ஷவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தினை பெற்றிருக்கின்றார். இலங்கை T20I அணி இனம் கண்ட அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான பானுக்க ராஜபக்ஷ இலங்கை அணிக்காக ஒருநாள் போட்டிகள் எதிலும் ஆடாத நிலையில்,  அவருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி, இலங்கை ஒருநாள் அணியில் இணைய வாய்ப்பு ஒன்று உருவாக்கி கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேநேரம், இலங்கை அணி பாகிஸ்தானில் விளையாடிய மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற விக்கெட் காப்பு துடுப்பாட்டவீரர் மினோத் பானுக்கவும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான பயிற்சி ஒருநாள் போட்டியில் ஆடவிருக்கின்றார்.

இதேவேளை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்ட லஹிரு திரிமான்ன, பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் தலைவராக செயற்படவிருக்கின்றார்.  

அதேவேளை, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டியில் வாய்ப்பினை பெற்ற பெதும் நிஷங்க மற்றும் அசேல குணரத்ன ஆகியோர் இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியில் தொடர்ந்தும் தமது இடத்தை தக்கவைக்க, வேகப்பந்து வீச்சாளரான அசித்த பெர்னாந்துவும் இணைக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் தவிர இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்னாந்து, சுழல் பந்துவீச்சாளர்களான அஷேன் பண்டார, புலின தரங்க ஆகியோர் மூலம் பலப்படுத்தப்படுகின்றது. 

இலங்கை கிரிக்கெட் பதினொருவர் கிரிக்கெட் அணி மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி இடையிலான பயிற்சிப் போட்டிகள் நிறைவடைந்த பின்னர், இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை (22) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகின்றது. 

இலங்கை பதினொருவர் கிரிக்கெட் அணி – லஹிரு திரிமான்ன (அணித்தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, மினோத் பானுக்க, ரமேஷ் மெண்டிஸ், அமில அபொன்சோ, அசித்த பெர்னாந்து, கசுன் ராஜித,  அஷேன் பண்டார, திக்ஷில டி சில்வா, புலின தரங்க

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<