உலகக் கிண்ணத்திற்கான பதினொருவர் அணியில் இலங்கையின் ரவிந்து ரசந்த

164
©ICC

இந்த ஆண்டுக்கான (2020) ஐ.சி.சி. இன் 19  வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) தென்னாபிரிக்காவில் நிறைவுக்கு வந்தது. 

இந்த உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் இளையோர் அணி, இந்திய இளையோர் அணியை வீழ்த்தி முதல் தடவையாக சம்பியன் பட்டம் வென்ற நிலையில், இந்த உலகக் கிண்ணத்தில் சிறப்பாக செயற்பட்ட வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தொடரின் சிறந்த பதினொருவர் அணி, ஐ.சி.சி. இனால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையரின் பயிற்றுவிப்பில் பங்களாதேஷுக்கு கன்னி உலகக் கிண்ணம்

ஐ.சி.சி இளையோர் உலகக் கிண்ணத்தின் இறுதிப் ……….

அந்தவகையில், ஆறு நாடுகளின் வீரர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த பதினொருவர் அணியின் தலைவர் பதவியானது பங்களாதஷ் இளையோர் அணியை இந்த உலகக் கிண்ணத்தில் வழிநடாத்திய, அக்பர் அலிக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான அக்பர் அலி, உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது தரப்பு வெற்றி பெறுவதற்கான துடுப்பாட்டத்தினை வெளிப்படுத்தியிருந்த வீரராக இருந்தார். 

இந்த பதினொருவர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக செயற்படும் வாய்ப்பு, இந்தியாவின் யஷஸ்வி ஜைய்ஸ்வாலிற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. உலகக் கிண்ணத்தில் இந்திய இளம் அணியின் துடுப்பாட்ட நங்கூரமாக செயற்பட்ட யஷஸ்வி ஜைய்ஸ்வால், 400 ஓட்டங்களைக் குவித்து, 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருந்தார். 

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இப்ராஹிம் சத்ரான், உலகக் கிண்ணத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரருக்கான இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொள்கின்றார். சத்ரான் இந்த உலகக் கிண்ணத்தில் 5 இன்னிங்சுகளில் விளையாடி 240 ஓட்டங்களைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் ரவிந்து ரசஞ்சனவிற்கும் இந்த உலகக் கிண்ணத்திற்கான அணியில் சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. ரவிந்து ரசந்த 19 வயதுக்கு உட்பட்ட இளையோர் உலகக் கிண்ணத்தில் 286 ஓட்டங்களோடு அதிக ஓட்டங்கள் பெற்ற வீரர்கள் வரிசையில் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றார்.

துடுப்பாட்ட வீரர்கள் ஒருபுறமிருக்க, உலகக் கிண்ணத் தொடருக்கான பதினொருவர் அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இந்தியாவின் ரவி பிஷ்னோய் இடம்பெற்றுள்ளார். மணிக்கட்டு சுழல் பந்துவீச்சாளரான ரவி பிஷ்னோய் இந்த உலகக் கிண்ணத்தில் 17 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, தொடரில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறியிருந்தார். 

அதேநேரம், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான கார்திக் தியாகியும் உலகக் கிண்ணத் தொடருக்கான பதினொருவர் அணியில் இடம்பெற்றுள்ளார். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பந்துவீசும் ஆற்றல் கொண்ட கார்திக் தியாகி 13.90 என்ற பந்துவீச்சு சராசரியுடன் 11 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இவர்கள் தவிர மேற்கிந்திய தீவுகளின் வீரர்களான நையிம் யங், ஜய்டன் சீல்ஸ் ஆகியோரும் உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த பதினொருவர் அணியில் தங்களுக்கென இடம் ஒன்றினைப் பெற்றிருக்கின்றனர். அதேநேரம், கனாடாவின் வேகப்பந்துவீச்சாளரான அனில் குமாரிற்கு 12 ஆவது இலக்கத்திற்குரிய வீரரின் இடம் வழங்கப்பட்டுள்ளது. அனில் குமார், 15.37 என்கிற சராசரியோடு 16 விக்கெட்டுக்களை கைப்பற்றி உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும், இந்த உலகக் கிண்ணத்திற்கான சிறந்த பதினொருவர் அணியில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் போயிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

உலகக் கிண்ணத் தொடரின் சிறந்த பதினொருவர் அணி (துடுப்பாட்ட வரிசையின் அடிப்படையில்)

  1. யஷஸ்வி ஜைய்ஸ்வால் – இந்தியா  
  2. இப்ராஹிம் சத்ரான் – ஆப்கானிஸ்தான்
  3. ரவிந்து ரசந்த – இலங்கை
  4. மஹ்மதுல் ஹசன் ஜோய் – பங்களாதேஷ்
  5. சஹாதத் ஹொசைன் – பங்களாதேஷ்
  6. நையிம் யங் – மேற்கிந்திய தீவுகள்
  7. அக்பர் அலி  – பங்களாதேஷ் (அணித்தலைவர், விக்கெட்காப்பாளர்)
  8. சபிகுல்லாஹ் காபரி – ஆப்கானிஸ்தான்
  9. ரவி பிஷ்னோய் – இந்தியா 
  10. கார்திக் தியாகி – இந்தியா
  11. ஜெய்டன் சீல்ஸ் – மேற்கிந்திய தீவுகள்
  12. அனீல் குமார் – கனடா (12ஆவது இலக்க வீரர்) 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<