ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கை பெண்கள் கபடி அணியின் நட்சத்திர வீராங்கனையான சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மனோரி ஜயசிங்கவுக்கு இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனத்தினால் (SLADA) நான்கு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவின் போது குறித்த வீராங்கனையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட A மாதிரி சிறுநீரில் தடைசெய்யப்பட்ட டியுரடிக் என்ற ஊக்கமருந்து கலந்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே அவருக்கு இந்தப் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து குற்றச்சாட்டிலிருந்து காலிங்க குமாரகே விடுவிப்பு
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து……
இது குறித்து இலங்கை கபடி சம்மேளனத்துக்கு கடிதம் மூலம் இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.
பொலன்னறுவையில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் வருடத்தின் அதி சிறந்த கபடி வீராங்கனையாகத் தெரிவாகியவரும், அண்மைக்காலமாக தேசிய கபடி அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தவருமான மனோரி ஜயசிங்கவுக்கு 2022 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரை எந்தவொரு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொடர்களில் பங்குபற்ற முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தீர்ப்பில் அதிருப்தி இருக்குமாயின், 2013 இலக்கம் 33 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான சட்டமூலத்தின் 26(1) (அ) உப பிரிவுக்கு அமைய இரண்டு வாரங்களுக்குள் மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது.
இது இவ்வாறிருக்க, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுப்பதாக மனோரி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உலக ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனத்தின் (WADA) அனுமதியைப் பெற்ற இந்தியாவில் ஸ்தாபிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் வைத்து தான் குறித்த வீராங்கனையின் சிறுநீர் மாதிரி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
எனினும், கடந்த சில மாதங்களுக்கு முன் உரிய தரத்தைக் கொண்டிருக்காத காரணத்தால் அந்த ஆய்வு மையத்தை தடை செய்வதற்கு உலக ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனால் மனோரி ஜயசிங்கவின் B மாதிரி சிறுநீர் பரிசோதனையை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பின்னணியில் குறித்த வீராங்கனைக்கு 4 வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளமை அசாதாரணமானது என இலங்கை கபடி சம்மேளனத்தின் தலைவர் அநுர பத்திரன தெரிவித்தார்.
இதேநேரம், தனது அழகை மெருகூட்டுவதற்காக வழமையாக பயன்படுத்தி வருகின்ற தேநீர் பானத்தைத் தான் உட்கொண்டதாகவும், அதில் டியுரடிக் என்ற ஊக்கமருந்து இருப்பதை தான் அறிந்திருக்கவில்லை என குறித்த வீராங்கனை தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமின்றி, தேசிய ஒளடதங்கள் அதிகார சபையினால் குறித்த பானத்தில் எந்தவொரு ஊக்கமருந்தும் கலந்திருக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கெரோனா வைரஸினால் தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டிகள் ஒத்திவைப்பு
சீனா முழுவதும் வேகமாக பரவி வருகின்ற…..
இந்த நிலையில், குறித்த வீராங்கனையுடன் தென் மாகாணத்தைச் சேர்ந்த சாமர நுவன் என்ற கபடி வீரரும் ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், B மாதிரி சிறுநீர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என குறித்த வீரரினால் இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த வீரர் கபடி விளையாட்டை விட்டு ஒதுங்கி தொழில் புரிவதற்காக தென் கொரியா சென்றுள்ளதால் அவருக்கான விசாரணையை கைவிடுவதற்கு இலங்கை ஊக்கமருந்து பாவனை தடுப்பு முகவர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
>>மேலும் விளையாட்டு செய்திகளைப் படிக்க<<