அபார சதத்தின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய குசல் மெண்டிஸ்

201

இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை எதிர் ஜிம்பாப்வே  அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையானது வீரர்களுக்கான புதிய தரப்படுத்தலை வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 3-1 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியிருந்தது. இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அந்தஸ்து அற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக ஜிம்பாப்வே மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 1-0 என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியிருந்தது.

மெண்டிஸின் அபார சதத்தால் தொடர் வெற்றி இலங்கை வசம்!

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி வெற்றித் தோல்வியின்றி…

துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசை

ஜிம்பாப்வே அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டமிழக்காது போட்டியை சமநிலைக்கு இட்டுச்சென்று டெஸ்ட் அரங்கில் தனது 7ஆவது சதத்தை பூர்த்தி செய்த இளம் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் தொடரில் மொத்தமாக 218 ஓட்டங்களை குவித்ததன் ஊடாக 3 நிலைகள் உயர்ந்து 628 தரவரிசை புள்ளிகளுடன் 23ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

மேலும், குறித்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 44 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸிலும் 47 ஓட்டங்களை குவித்து இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஓசத பெர்ணான்டோ 5 நிலைகள் உயர்ந்து 493 தரவரிசை புள்ளிகளுடன் 54ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடனான இறுதி டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் அரைச்சதம் அடித்து அசத்திய இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் ஒரு நிலை உயர்ந்து 764 தரவரிசை புள்ளிகளுடன் 8ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். மேலும், தென்னாபிரிக்க அணிக்கு முதல் இன்னிங்ஸில் தனி மனிதனாக பேராடிய விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் 2 நிலைகள் உயர்ந்து, 11ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியுடன் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 44 ஓட்டங்களை குவித்த டொம் சிப்லேய் வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் (471) 9 நிலைகள் உயர்ந்து 61ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். மேலும், இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஒல்லி போப் 6 நிலைகள் உயர்ந்து 55ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார். இதேவேளை, தங்களது சொந்த மண்ணில் இலங்கை அணிக்கு சவால் விடுத்த ஜிம்பாப்வே அணியின் ப்ரெண்டன் டைலர், சிக்கண்டர் ராஸா மற்றும் ஷேன் வில்லியம்ஸ் ஆகியோர் துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.

பங்களாதேஷ் தொடருக்கான பாகிஸ்தான் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள இரண்டு…

முதல் இன்னிங்ஸில் 62 ஓட்டங்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 67 ஓட்டங்களை குவித்த ப்ரெண்டன் டைலர் 8 நிலைகள் உயர்ந்து 632 தரவரிசை புள்ளிகளுடன் 22ஆவது நிலைக்கும், 72 மற்றும் 34 ஆட்டங்களை குவித்த சகலதுறை வீரர் சிக்கண்டர் ராஸா 13 நிலைகள் உயர்ந்து 490 தரவரிசை புள்ளிகளுடன் 57ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர்.

அத்துடன் முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காது அரைச்சதம் அடித்து அசத்திய ஜிம்பாப்வே அணித்தலைவர் ஷேன் வில்லியம்ஸ் வாழ்நாள் அதிக தரவரிசை புள்ளிகளுடன் (485) 22 நிலைகள் உயர்ந்து இங்கிலாந்து வீரர் டொம் சிப்லேயுடன் 61ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர்களை திணறடிக்கச்செய்து முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்கள் என மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றிய இங்கிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் மார்ச் வூட் வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (439) 19 நிலைகள் உயர்ந்து 38ஆவது நிலைக்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களை தனது சுழலில் மடக்கி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை வேட்டையாடிய சகலதுறை வீரர் சிக்கண்டர் ராஸா வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (340) 21 நிலைகள் உயர்ந்து 51ஆவது நிலைக்கும், இங்கிலாந்துடனான போட்டியில் ஒரு 5 விக்கெட்டுடன் மொத்தமாக 7 விக்கெட்டுக்களை கைப்பற்றிய தென்னாபிரிக்க வேகப் பந்துவீச்சாளர் அண்ரிச் நோட்ரியா வாழ்நாள் அதிகபட்ச தரவரிசை புள்ளிகளுடன் (325) 20 நிலைகள் உயர்ந்து 53ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர். 

பாகிஸ்தானை எதிர்கொள்ளும் பங்களாதேஷ் டெஸ்ட் குழாம் அறிவிப்பு

பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின்…

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதல் 10 நிலைகளுக்குள் குறித்த இரு தொடர்களிலும் விளையாடிய வீரர்கள் பிரகாசிக்க தவறியதன் விளைவாக இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மொஹமட் ஷமி 9ஆவது நிலைக்கும், அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜொஸ் ஹெஸில்வூட் 10ஆவது நிலைக்கும் முன்னேறியுள்ளனர்.  

இதேவேளை, குறித்த தொடர் நிறைவில் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களுக்கு தரவரிசையில் முன்னேற்றங்கள் எதுவும் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சகலதுறை வீரர்களுக்கான தரவரிசை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய தென்னாபிரிக்க அணியின் சகலதுறை வீரர் வேர்னன் பிளான்டர் குறித்த தொடரில் பிரகாசிக்காததன் காரணமாக நான்காமிடத்திலிருந்து ஐந்தாமிடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் நான்காமிடத்திற்கு முன்னேறியுள்ளார். 

டெஸ்ட் சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கின்றார்.