தாய்லாந்தின் பெங்கொக் நகரில் எதிர்வரும் மே மாதம் நடைபெறவுள்ள ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் கோலூன்றிப் பாய்தல் வீரர்களான ஏ. புவிதரன், என். டக்சிதா மற்றும் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் சி. தீபிகா உள்ளிட்ட மூன்று வீர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளனர்.
தேசிய மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளராக வை.கே குலரத்ன பரிந்துரை
இலங்கை மெய்வல்லுனர் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இந்நாட்டின்…
இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற மன்னார் கொண்டச்சி முஸ்லிம் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கே.பி ஜெனுஷன் ஆசிய கனிஷ்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
19ஆவது ஆசிய கனிஷ்ட (20 வயதுக்குட்பட்ட) மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் எதிர்வரும் மே மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தாய்லாந்தின் பெங்கொக் நகரில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டித் தொடரை இலக்காகக் கொண்டு கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா, தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர், சேர். ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடர் உள்ளிட்ட தேசிய மட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களை உள்ளடக்கிய விசேட குழாமொன்று இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த குழாத்தில் இடம்பெற்றுள்ள வீரர்களை இலக்காகக் கொண்டு தகுதிகாண் போட்டிகளை மூன்று கட்டங்களாக நடத்துவதற்கு இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன் முதலாவது கட்டம் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள டொரிங்டன் மைதானத்தில் நடைபெற்றதுடன், முதலாவது கட்டத்தில் பங்கேற்ற வீரர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை நாளை (25) மற்றும் நாளை மறுதினம் (26) கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வுகள் நாளை காலை 6 மணிமுதல் 9 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலுக்காக தெரிவாகியுள்ள என். டக்சிதா மற்றும் சி.தீபிகா ஆகிய 2 வீராங்கனைகளும் பங்குபற்றவுள்ளனர்.
எனினும், 5,000 மீற்றர், 3000 மீற்றர், 10,000 மீற்றர், 400 மீற்றர் சட்டவேலி ஓட்டம், குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளுக்கான தேர்வுப் போட்டிகள் இதன்போது நடத்தப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரியின் புவிதரன் மற்றும் டக்சிதா
பாடசாலை மற்றும் தேசிய மட்டப் போட்டிகளில் அண்மைக்காலமாக திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவனான ஏ.புவிதரன் இம்முறை ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான இலங்கை குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற இவர், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தங்கப் பதக்கத்தினை வென்றார்.
அதன்பிறகு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 4.82 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதேநேரம், அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற, பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தேசிய கனிஷ்ட சம்பியனான என். டக்சிதா, முதல்தடவையாக இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பிடித்துள்ளார்.
கடந்த 2018இல் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் மற்றும் அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் 18 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் வெள்ளிப் பதக்கங்களை வென்ற டக்சிதா, கடந்த ஆகஸ்ட் மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 97ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதன்பிறகு தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற அவர், இறுதியாக நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனரில் முதல்தடவையாக 20 வயதுக்குட்பட்ட வயதுப் பிரிவில் களமிறங்கி (3.35 மீற்றர்) புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பழை மாணவி தீபிகா
கடந்த வருட இறுதியில் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.23 மீற்றர் உயரத்தைத் தாவி யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவி சி. தீபிகா புதிய போட்டிச் சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கம் வென்றார்.
அதற்குமுன் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் முதல் தடவையாகக் களமிறங்கிய தீபிகா, 2.80 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தினை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய உள்ளக மெய்வல்லுனரில் ஏழு இலங்கை வீரர்கள்
நேபாளத்தில் அண்மையில் நிறைவுக்கு வந்த தெற்காசிய விளையாட்டு விழா (SAG)…
மன்னாரின் ஜெனுஷன்
கடந்த வருடம் நடைபெற்ற 35ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கொண்டச்சி முஸ்லிம் கலவன் பாடசாலையைச் சேர்ந்த கே.பி ஜெனுஷன், ஆசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தேர்வுக் குழுவில் இடம்பிடித்துள்ளார்.
குறித்த போட்டியில் அவர் 6.99 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2018இல் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியிலும் இதே போட்டியில் அவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<